தமிழகத்தில் 17,277 பேருக்கு டெங்கு: மக்கள் எச்சரிக்கை
22 புரட்டாசி 2026 செவ்வாய் 06:02 | பார்வைகள் : 771
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. நேற்று மட்டும் 228 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் சென்னையில் 79 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,277 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், 29 பேருக்கு உண்ணி காய்ச்சல் பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
டெங்கு காய்ச்சல் நிலவரம் குறித்து மாநில அளவில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட வாரியாக டெங்கு மற்றும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை, பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகள், கொசு உற்பத்தியாகும் இடங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மற்றும் புகை மருந்து தெளிக்கும் உபகரணங்களின் இருப்பு ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன.
டெங்கு காய்ச்சலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பாதிப்பைத் தடுக்க அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



