ஐநா நிரந்தர இடத்துக்கு இந்தியாவுக்கு 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு
22 புரட்டாசி 2026 செவ்வாய் 08:09 | பார்வைகள் : 1085
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு போலந்து, ஹங்கேரி, சிலோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் 81வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். போலந்து, ஹங்கேரி, சிலோவாக்கியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடைபெற்ற முதல் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய தெற்கின் முன்னணி நாடாகவும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் சக்தியாகவும் இந்தியா இருப்பதால், ஐநாவின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பில் அதற்கு இடம் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநாவில் நிரந்தர இடம் பெறுவதற்கான இந்தியாவின் முயற்சிக்கு 4 ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்த நாடுகளுடன் அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வணிகக் கூட்டமைப்பு மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஈக்வடார் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களை கையாள்வது, சர்வதேச சட்டம், விதிகள் மற்றும் நெறிமுறைகளின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து எடுத்துரைத்ததாக ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



