காமராஜர் காலை உணவுத்திட்டம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர்

காமராஜர் காலை உணவுத்திட்டம்; சென்னையில் துவங்கி வைத்தார் முதல்வர்

22 புரட்டாசி 2026 செவ்வாய் 09:11 | பார்வைகள் : 1998


6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்காக விரிவாக்கம் செய்யப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை, சென்னை திருவான்மியூரில் இன்று (செப். 22) முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.

கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'முதல்வரின் காலை உணவு திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவுபடுத்த தமிழக வெற்றிக்கழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என மாற்றி தமிழக அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்கான தொடக்க விழா இன்று (செப். 22) சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் முதல்வர் விஜய் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் விஜய் உணவு பரிமாறினார். பின்னர், மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து உணவருந்திய அவர், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இத்திட்டத்தின் விரிவாக்கத்தின் மூலம், 15,454 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 15.30 லட்சம் மாணவ, மாணவியர்கள் கூடுதலாக பயனடைவார்கள்.

நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்திற்காக கூடுதலாக ரூ.217 கோடியே 63 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் திட்டத்திற்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ.724 கோடியாக உள்ளது.
 

தொடர்ந்து படிக்க