அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை

அமைச்சரவையை மாற்றம் செய்ய முதல்-அமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை

22 புரட்டாசி 2026 செவ்வாய் 11:16 | பார்வைகள் : 1146


சில அமைச்சர்களின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து முதல்-அமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த மே மாதம் த.வெ.க. அரசு பொறுப்பேற்றது. அப்போது முதல்-அமைச்சராக விஜய்யும், ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். பின்னர் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும் பதவியேற்றனர்.

தனது அமைச்சரவையில் எந்த அமைச்சரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகக் கூடாது என்பதில் முதல்-அமைச்சர் விஜய் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சரவை கூட்டங்களிலும் இதனை அமைச்சர்களிடம் அவர் வலியுறுத்தி வருகிறார். யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

### சில அமைச்சர்கள் மீது அதிருப்தி?

சில அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரும் நிறைவடைந்தது. இதில் அமைச்சர்களின் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிந்ததாகவும், அவர்களில் சிலரின் செயல்பாடுகள் மீது முதல்-அமைச்சர் விஜய்க்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மின்வெட்டு, கட்டுப்படுத்தப்படாத விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்களும் முதல்-அமைச்சர் விஜய்க்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் பக்தர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு அவமானம் நேர்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் முதல்-அமைச்சர் விஜய்யை கோபப்படுத்தியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை போக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சூழ்நிலைகளில் ஜெயலலிதா போன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் விஜய் விருப்பம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது.

### உளவுத்துறை பட்டியல்

ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள் குறித்த விவரங்களையும் உளவுத்துறை மூலம் முதல்-அமைச்சர் விஜய் பட்டியலிட்டு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் யாரை சந்திக்கின்றனர், என்ன பேசுகின்றனர், யாரால் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அவரிடம் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அரசின் பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. காலை உணவுத் திட்ட விரிவாக்கம், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட உள்ளன. மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் சில அமைச்சர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளையில், அமைச்சரவையில் இடம்பிடிக்க சில எம்.எல்.ஏ.க்கள் ஆர்வத்துடன் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தொடர்ந்து படிக்க