சோனியா மீதான வாக்காளர் வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு

சோனியா மீதான வாக்காளர் வழக்கு: மீண்டும் விசாரணைக்கு உத்தரவு

22 புரட்டாசி 2026 செவ்வாய் 13:21 | பார்வைகள் : 852


காங்கிரஸ் பார்லி., குழு தலைவர் சோனியா, 79, இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்பே, 1980-ல் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய மறுத்த மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை சிறப்பு நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான விகாஸ் திரிபாதி, டில்லியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, 1983 ஏப்ரலில் தான் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், அதற்கு முன்பாகவே 1980-ல், டில்லி சப்தர்ஜங் ரோடு முகவரியை அடிப்படையாகக் கொண்டு அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது. பின்னர் 1982-ல் அவரது பெயர் நீக்கப்பட்டு, மீண்டும் 1983-ல் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

### தள்ளுபடி

இந்திய குடியுரிமை இல்லாத நிலையில் சோனியாவின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி என்றும், போலி ஆவணங்கள் மூலம் இது நடந்திருக்கலாம் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, சோனியா மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, 2025 செப்., 11ல் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, டில்லி ரோஸ் அவென்யூவில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

### நீதிமன்ற உத்தரவு

இந்த மனுவை விசாரித்த நீதிபதி விஷால் கோக்னே நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் மாஜிஸ்திரேட் மனுவை தள்ளுபடி செய்ததை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் பல சட்டப்பிழைகள் ஏற்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் முதற்கட்டமாக எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிடுவதா அல்லது குற்றவியல் விசாரணை நடத்துவதா என்பது தொடர்பான சட்ட விதிகளையும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் நிலை அறிக்கை பெற்று விசாரிக்க வேண்டிய நடைமுறையையும் மாஜிஸ்திரேட் பின்பற்றவில்லை.

### நம்பிக்கை

நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே வாக்காளர் பட்டியலில் இடமுண்டு என்ற நிலையில், குற்றச்செயல் நடந்துள்ளதா என்பதை ஆராயாமல், குடியுரிமை அதிகார வரம்பை காரணம் காட்டி புகாரை தள்ளுபடி செய்தது முறையல்ல.

மாஜிஸ்திரேட்டின் பணியை சிறப்பு நீதிமன்றமே மேற்கொள்ள முடியாது என்பதால், இந்த வழக்கு மீண்டும் விசாரணை நீதிமன்றத்திற்கே அனுப்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியிடம் நிலை அறிக்கை பெற்று, இரு தரப்பு வாதங்களையும் முறையாகக் கேட்டு, விரிவான காரணங்களுடன் புதிய உத்தரவை மாஜிஸ்திரேட் பிறப்பிக்க வேண்டும்.

ஜனநாயகத்தில் வாக்காளர் பட்டியலின் புனிதத்தன்மை என்பது ஒவ்வொரு குடிமகனின் நம்பிக்கையாகும். நாட்டில் மிகுந்த அதிகாரம் அல்லது செல்வாக்கு கொண்ட நபராக இருந்தாலும், அவரும் மற்றொரு சாதாரண குடிமகனைப் போலவே ஒரு வாக்காளர்தான்.

எனவே, இந்த விவகாரத்தை மாஜிஸ்திரேட் முறையாக விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கு வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

தொடர்ந்து படிக்க