பாடசாலையை விட்டு தனியாக வெளியேறிய 2 வயது சிறுவன் – 3 ஊழியர்கள் இடைநீக்கம்!!
22 புரட்டாசி 2026 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 2741
பரிஸ் 16ஆம் வட்டாரத்திலுள்ள école maternelle ஒன்றில் இருந்து 2 வயது சிறுவன் யாருடைய கண்காணிப்பும் இன்றி தனியாக வெளியேறி, சுமார் 500 மீற்றர் தூரம் வீதிகளில் அலைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமைஇந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில், சிறுவன் மாலை 6 மணி வரை இருக்க வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாலை 4.30 மணியளவில் எந்தவொரு பெரியவரின் துணையும் இன்றி அவன் பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளான்.
Pikachu பை ஒன்றை முதுகில் சுமந்தபடி சுமார் 30 நிமிடங்கள் தனியாக அலைந்த சிறுவனை, Trocadéro பகுதியில் Eiffel Tower-க்கு எதிரே ஜப்பானிய சுற்றுலாப் பயணி ஒருவர் கவனித்துள்ளார். அவர் அருகிலிருந்த café ஒன்றில் உதவி கோரியதையடுத்து, café உரிமையாளர் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். இதற்கிடையில் சிறுவனை அழைத்துச் செல்ல பாடசாலைக்கு வந்த தாயார், மகன் அங்கு இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், பெற்றோர் அவரைத் தேடி அலைந்துள்ளனர். பின்னர் சுமார் மாலை 7.30 மணியளவில் காவல் நிலையத்திலிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் மூலம் சிறுவன் பாதுகாப்பாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் பெற்றோர் பரிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர். பரிஸ் நகராட்சி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரியதுடன், இந்த சம்பவத்தை “ஏற்றுக்கொள்ள முடியாதது” எனத் தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் நிர்வாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், école périscolaire அணியைச் சேர்ந்த மூன்று ஊழியர்கள் விசாரணை முடியும் வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான ஒழுங்கு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.



