செப்டெம்பர் 28 முதல் RATP ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – CGT அழைப்பு!!
22 புரட்டாசி 2026 செவ்வாய் 22:27 | பார்வைகள் : 2327
Île-de-France பொதுப் போக்குவரத்து சேவையை இயக்கும் RATP நிறுவன ஊழியர்கள் செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி மாலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு CGT-RATP தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. நிறுவனத்தின் நான்கு பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்களில் முன்னணியில் உள்ள CGT-RATP, நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெட்ரோ, RER A மற்றும் RER B தொடருந்து சேவைகள் மற்றும் சில பேருந்து சேவைகளில் இதன் தாக்கம் ஏற்படக்கூடும்.
ஊழியர்களின் வாங்கும் சக்தி குறைந்து வருவதுடன், வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையிலும் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என CGT குற்றம்சாட்டியுள்ளது. அனைத்து RATP ஊழியர்களுக்கும் 600 யூரோக்கள் எரிபொருள் கொடுப்பனவு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேரம் அல்லது மாற்றுப் பணிநேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான போக்குவரத்து தொடர்பான கூடுதல் கொடுப்பனவை உயர்த்துதல், பணவீக்கத்துக்கு ஏற்ப ஊதியத்தை தானாக அதிகரிக்கும் முறையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் தொழிற்சங்கம் முன்வைத்துள்ளது.
இதனுடன், கடந்த மார்ச் மாதம் உடன்பாடின்றி முடிவடைந்த கட்டாய வருடாந்த ஊதிய பேச்சுவார்த்தைகளை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்றும் CGT கோரியுள்ளது. வார இறுதிப் பணிக்கான கொடுப்பனவுகளை உயர்த்துவது உள்ளிட்ட நிர்வாகத்தின் முன்மொழிவுகளில் தொழிற்சங்கம் கையெழுத்திட்டிருந்தாலும், மற்ற பிரதிநிதித்துவ தொழிற்சங்கங்கள் அதனை ஏற்கவில்லை.
இந்நிலையில், RATP குழுமத்தின் புதிய தலைவரான Xavier Piechaczyk-கிடம் அடுத்த கட்டாய பேச்சுவார்த்தைக்காக 2027ஆம் ஆண்டு வரை காத்திருக்காமல் ஊதிய பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என CGT வலியுறுத்தியுள்ளது. செப்டெம்பர் 29ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ள தேசிய பொதுச் சேவை பாதுகாப்பு போராட்டத்துடன் இந்த வேலைநிறுத்தத்தையும் இணைக்கும் வகையில், செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி மாலை 7 மணி முதல் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. RATP நிர்வாகம் வேலைநிறுத்த முன் அறிவிப்பு தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.



