விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி: அமைச்சர் வன்னி அரசு தகவல்
23 புரட்டாசி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 16217
சமூக நீதி விடுதி மாணவர்களுக்கு மாட்டிறைச்சி வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி. ராஜா சமூக நீதி மாணவர் விடுதியில், நேற்று முன்தினம் இரவு அமைச்சர் வன்னி அரசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, அதன் தரம் மற்றும் மெனு மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
சமூக நீதி விடுதிகளில் சிக்கன், மட்டன் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகின்றன. உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சியையும் சேர்க்க வேண்டும் என சில மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ளதால், தங்கள் வீடுகளில் மட்டன் அதிகம் சாப்பிட்டதில்லை என்றும், தங்களுக்கு மாட்டிறைச்சி வேண்டும் என்றும் சில மாணவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சில மாணவர்கள் மாட்டிறைச்சி வேண்டாம் என்கின்றனர்.
இதுகுறித்து மாணவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.
### விபரீதமான முடிவு: கிருஷ்ணசாமி எச்சரிக்கை
புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாட்டிறைச்சி தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாசாரத்திலும் இடம்பெறவில்லை. அது சில தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் உணவுப் பழக்கமாகும்.
அமைச்சர் வன்னி அரசு தவறான, விபரீதமான முடிவை எடுக்க மாட்டார் என நம்புகிறோம். ஒருவேளை அதை அமல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழல் ஏற்படக்கூடும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



