டேட்டா இல்லாத ரீசார்ஜ் கட்டாயம்: டிராய் உத்தரவு

டேட்டா இல்லாத ரீசார்ஜ் கட்டாயம்: டிராய் உத்தரவு

23 புரட்டாசி 2026 புதன் 07:44 | பார்வைகள் : 550


குறுகிய காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், இணையதள சேவை இல்லாமல் குரல் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் மட்டும் அடங்கிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும் என, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இணையதள சேவையுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களையே அதிகளவில் வழங்கி வருகின்றன. இதனால், சாதாரண மொபைல் போன் பயன்படுத்துவோரும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

### ஏற்பாடு

தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு (13வது திருத்தம்) ஒழுங்குமுறை, 2026ன் விதிமுறைகளின்படி டிராய் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இணையதள சேவை இல்லாமல், குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., மட்டும் அடங்கிய ரீசார்ஜ் திட்டங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.

குரல் அழைப்பு, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதள சேவைகளுடன் வழங்கப்படும் 30 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அளவிலான திட்டங்களுக்கு இணையாக, இந்த புதிய திட்டங்களும் வழங்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் புதுப்பிக்கக்கூடிய வகையில் இத்திட்டங்கள் அமைய வேண்டும். குறிப்பிட்ட மாதத்தில் அந்த தேதி இல்லாதபட்சத்தில், அந்த மாதத்தின் கடைசி நாளில் புதுப்பித்தல் நடைபெறும் வகையில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

### மலிவு விலையில் வழங்க உத்தரவு

இணையதள வசதி நீக்கப்படுவதால், புதிய குரல் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்., திட்டங்களின் கட்டணம், டேட்டாவுடன் கூடிய வழக்கமான திட்டங்களை விட குறிப்பிடத்தக்க அளவு குறைவாகவும், மலிவாகவும் இருக்க வேண்டும் என டிராய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டிராய் அதிகாரிகள் கூறுகையில், "இந்த புதிய கட்டண கட்டமைப்பு நுகர்வோரின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்யும். இணையதள சேவை தேவையில்லாதவர்களும், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத சாதாரண மொபைல் போன் வாடிக்கையாளர்களும் இதனால் அதிகளவில் பயனடைவர்" என்றனர்.
 

தொடர்ந்து படிக்க