லஞ்ச வழக்கில் மாஜி முதல்வர் பினராயி விஜயனுக்கு சிக்கல்!
23 புரட்டாசி 2026 புதன் 08:50 | பார்வைகள் : 253
கேரளாவில் தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து ரூ.3.28 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாக்கத்துறை பரிந்துரைத்திருந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் தற்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.டி. சதீசன் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பு 2016 முதல் 2026 வரை 10 ஆண்டுகள் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்றது. அந்த காலகட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராயி விஜயன் முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது, 2017-ம் ஆண்டு, பினராயி விஜயனின் மகள் வீணாவுக்குச் சொந்தமான ‘எக்ஸாலாஜிக்’ நிறுவனத்துக்கு, ‘கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட்’ (சி.எம்.ஆர்.எல்.) என்ற சுரங்க நிறுவனத்திடம் இருந்து ரூ.3.28 கோடி வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தத் தொகை லஞ்சமாக வழங்கப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், தகவல் தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் மென்பொருள் ஆதரவு சேவைகளை வழங்குவதற்காக இரு நிறுவனங்களுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில் நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகள் சட்டவிரோதமானவை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் பணப் பரிவர்த்தனைகளில் ஒரு பகுதி ஹவாலா முறையில் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. குறிப்பாக, முகமது ரியாஸ் தொடர்பாகவும் ஹவாலா பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அமலாக்கத்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசிடம் அமலாக்கத்துறை பரிந்துரை செய்தது. இதையடுத்து, மாநில போலீஸ் தலைமை இயக்குனருக்கு அனுப்பிய அறிக்கையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் சோதனைகளின்போது சேகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அடிப்படையில், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது.
அமலாக்கத்துறை அளித்த அறிக்கையைத் தொடர்ந்து, அதன் பரிந்துரையை ஏற்று விசாரணை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் வி.டி. சதீசன் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பின்னர் விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதாலா கூறுகையில், “அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த விவகாரம் தொடர்பாக மாநில போலீசார் விசாரணை நடத்தும்படி முதல்வர் வி.டி. சதீசன் உத்தரவிட்டுள்ளார்” என்றார்.
இதன்படி, அமலாக்கத்துறை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்த குற்றச்சாட்டுகள் ஆகியவை குறித்து போலீஸ் தரப்பில் விசாரணை நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரணையின் மூலம் பரிசீலிக்கப்பட உள்ளன.



