செப்., 28 முதல் செப். 30 வரை வங்கிகள் ஸ்டிரைக்!

செப்., 28 முதல் செப். 30 வரை வங்கிகள் ஸ்டிரைக்!

23 புரட்டாசி 2026 புதன் 09:52 | பார்வைகள் : 231


நாடு முழுவதும் தேசிய வங்கிகளின் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செப்., 28 முதல் 30 வரை ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனால், செப்., 26 முதல் 30 வரை தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வங்கி வேலை நாட்களை வாரத்திற்கு 5 நாட்களாக குறைக்க வேண்டும், ஊக்கத்தொகைகளை சமமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் உள்ள தேசிய வங்கிகளின் அலுவலர் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் இந்த ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., 28 முதல் 30 வரை நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் சுமார் 2.50 லட்சம் பேர் பங்கேற்பர் என சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

செப்., 26, மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை. அதற்கு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை. இதையடுத்து, செப்., 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் ஸ்டிரைக் நடைபெறுவதால், மொத்தம் 5 நாட்கள் வரை வங்கிப் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

“வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வங்கி பெட்டகங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்களிடம் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செப்., 24க்கு பிறகு பணிக்கு வராமல் இருந்தால், அவர்களை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிக்கு வருபவர்களைத் தடுப்போர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எந்தவித தடையும் இன்றி ஏ.டி.எம்.,களில் பணம் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க