ஹிந்துக்கள் எழுச்சி கம்யூனிஸ்ட்டுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: ஹிந்து முன்னணி தலைவர்

ஹிந்துக்கள் எழுச்சி கம்யூனிஸ்ட்டுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: ஹிந்து முன்னணி தலைவர்

23 புரட்டாசி 2026 புதன் 11:02 | பார்வைகள் : 291


ஹிந்துக்கள் எழுச்சி பெற்று வருவதாகவும், இதை பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரசுப்ரமணியம் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் அவர் அளித்த பேட்டி:

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள், ‘பாரத மாதாவிற்கு ஜே’ என முழக்கமிட்டனர். அப்போது, மசூதியில் இருந்த இருவர், ஸ்ரீவில்லிபுத்துாரில் குண்டு வெடிக்கும் என காவல்துறையினரிடமே தைரியமாக கூறியதாக அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாகவும், இதுவரை சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். அவர்களை 10 நாட்களுக்குள் கைது செய்யாவிட்டால், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

பல ஊர்களில் போலீஸ் அதிகாரிகள் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு எதிராக செயல்பட்டதாகவும், சில ஊர்களில் ஊர்வலம் சிறப்பாக நடத்தப்பட்டதாகவும் காடேஸ்வரசுப்ரமணியம் கூறினார். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் பெண்கள் அதிகளவில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹிந்துக்கள் எழுச்சி பெற்று வருவதை பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அவர்கள் கலவரம் செய்ய நினைத்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஹிந்து முன்னணியினர் விழிப்புணர்வுடன் செயல்பட்டதாக தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்துாரில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறை இதுவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். இதுகுறித்து கேட்டால், வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவிப்பதாகவும், இதனால் குற்றவாளிகள் ஜாமின் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனவே, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காடேஸ்வரசுப்ரமணியம் வலியுறுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க