தலைமைச் செயலக திட்டத்துக்கு எதிராக 29-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

தலைமைச் செயலக திட்டத்துக்கு எதிராக 29-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

23 புரட்டாசி 2026 புதன் 12:05 | பார்வைகள் : 242


பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி, வரும் செப். 29ஆம் தேதி மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

**கடும் எதிர்ப்பு**

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டார். இதுதொடர்பான அரசாணையையும் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனிடையே, பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தரப்பிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கடலோரப் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலும் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

**ஆர்ப்பாட்டம்**

இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி, செப். 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் மற்றும் மயிலை பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

**மீனவ மக்கள் முடிவு**

புதிய தலைமைச் செயலகம் அமைய உள்ள பகுதியை, மீனவர்களின் பாரம்பரிய குடியிருப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்காததால், தொடர் போராட்டங்களை முன்னெடுக்க மீனவ மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க