தமிழகத்தில் தொடங்கப்படும் முதலீட்டு திட்டங்களுக்கு 21 நாளில் அனுமதி
23 புரட்டாசி 2026 புதன் 13:12 | பார்வைகள் : 793
தமிழகத்தில் தொடங்கப்படும் முதலீட்டுத் திட்டங்களுக்கு 21 நாட்களுக்குள் அனுமதி வழங்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026 அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
### கவர்னர் ஒப்புதல்
தமிழ்நாடு வணிக எளிதாக்கல் (திருத்த) சட்டம், 2026 தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்திற்கு கவர்னர் அர்லேகர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் நோக்கில், ‘தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம்’ என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக அரசின் தலைமைச் செயலாளர் செயல்படுவார். தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் பொறுப்பு வகிக்கும் அரசு செயலாளர், உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளராக இருப்பார். மேலும், அரசு நிர்ணயிக்கும் முறையில் 20 பேருக்கு மிகாமல் உறுப்பினர்களை நியமிக்கலாம்.
பெரிய அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை இந்த ஆணையம் ஆய்வு செய்யும். குறிப்பாக, ரூ.200 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மூலதன முதலீடு மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள், 5,000 அல்லது அதற்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படும் திட்டங்கள், எப்.டி.ஏ., வர்த்தக ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய முதலீடுகள் மற்றும் இந்தியாவுக்கு வெளியே வசிக்கும் தமிழர் வம்சாவளியினரின் முதலீடுகள் ஆகியவை இதில் அடங்கும்.
### நிலம் ஒதுக்கீடு
இத்தகைய முதலீட்டுத் திட்டங்கள் தொடங்குவதற்கு முன் உள்ள நிலையில் இருந்து, அவை நடைமுறைக்கு வந்து உற்பத்தி அல்லது செயல்பாடுகள் தொடங்கும் நிலை வரை அவற்றின் முன்னேற்றத்தை ஆணையம் கண்காணிக்கும்.
பெரிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தேவையான அனுமதிகள், சலுகைகள் மற்றும் பிற ஒப்புதல்களை உரிய காலத்தில் வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்கலாம்.
தொழில் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு, இன்னும் வணிக ரீதியிலான செயல்பாடுகள் தொடங்காத தொழில் நிலங்களின் ஒதுக்கீடு மற்றும் பயன்பாடு குறித்தும் ஆணையம் ஆய்வு மேற்கொள்ளும்.
மேலும், தமிழகத்தில் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கவும் தேவையான கொள்கை, ஒழுங்குமுறை மற்றும் நடைமுறை நடவடிக்கைகளை ஆணையம் பரிந்துரைக்கும்.
இந்தச் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் ஒற்றைச் சாளர முறையுடன் தொடர்புடைய மத்திய அரசின் நடவடிக்கைகளை செயல்படுத்துதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் உள்ளிட்ட பணிகளையும் ஆணையம் மேற்கொள்ளும்.
### 21 நாட்கள்
தொழில் திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் தொடர்பாகவும் இந்தச் சட்டத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சட்டம் அல்லது அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் ஏதேனும் அனுமதிக்கு 21 நாட்களுக்கு மேல் காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலோ அல்லது காலவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாமல் இருந்தாலோ, அந்த அனுமதிக்கான காலவரம்பு 21 நாட்களாக குறைக்கப்பட்டதாக கருதப்படும்.
அரசு அறிவிக்கும் பொது விடுமுறைகள் மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்கள் இந்த 21 நாள் கணக்கில் சேர்க்கப்படாது.
ஏற்கனவே 21 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்த காலவரம்பே தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



