ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!!

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்!!

23 புரட்டாசி 2026 புதன் 08:10 | பார்வைகள் : 1304


ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நியூயோர்க் நகரில் உரையாற்றினார். ஈரான் போர், உக்ரைன் போர், மத்திய கிழக்கு நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து அவர் தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். போர்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களுக்கு மத்தியில் சர்வதேச சமூகம் பின்வாங்கக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், “உறுதியான தீர்வுகளைக் கண்டறிந்து அமைதியை கட்டியெழுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.

அமெரிக்கா–ஈரான் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது முன்னுரிமை என மக்ரோன் தெரிவித்தார். அதேவேளை, தொடர்ந்து அழிவை எதிர்கொள்ளும் லெபனான் நாட்டின் முழுமையான இறையாண்மைக்கு ஆதரவு தெரிவித்த அவர், அதுவே ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதங்களை களையவும், லெபனான் மற்றும் அதன் அண்டை நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் வழிவகுக்கும் என்றார். 

காசா நிலவரம் குறித்தும் கடும் கவலை வெளியிட்ட அவர், அங்கு நடைபெறும் சம்பவங்களை “நம் அனைவருக்கும் வெட்கத்தை ஏற்படுத்தும் காட்சி” என வர்ணித்தார். காசா விவகாரத்தில் செயலற்ற நிலையில் தொடர்ந்தால் சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் எனக் கூறிய அவர், இஸ்ரேல் மற்றும் அதன் மக்களின் தற்போதைய மற்றும் எதிர்கால பாதுகாப்புக்கு இரு நாடுகளின் அமைதியே அடிப்படையான தீர்வு என வலியுறுத்தினார்.

உக்ரைன் போர் தொடர்பாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தரப்பிலும் எரிசக்தி நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களுக்கு இரட்டைத் தற்காலிகத் தடையை (moratoire) ஏற்படுத்தும் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக மக்ரோன் தெரிவித்தார். மேலும், கருங்கடல் பகுதியில் தற்காலிக போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொண்டு தானிய ஏற்றுமதியை மீண்டும் சீர்படுத்த வேண்டும் என்றும், வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்புக்கு இது முக்கியமானது என்றும் கூறினார்.

 உக்ரைன் மக்களின் அமைதிக்கான விருப்பங்களுக்கு பிரான்ஸ் தொடர்ந்து ஆதரவளிக்கும் என தெரிவித்த அவர், G7 நாடுகளுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு (IA) துறையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். அமெரிக்கா மற்றும் சீனா மீது முழுமையாகச் சார்ந்திருக்காத மாற்று செயற்கை நுண்ணறிவு மாதிரி ஒன்றை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து படிக்க