கிராமங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி அவசியம்: ஸ்ரீதர் வேம்பு

கிராமங்களுக்கும் பொருளாதார வளர்ச்சி அவசியம்: ஸ்ரீதர் வேம்பு

24 புரட்டாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 203


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பெருநகரங்களை மட்டுமே சார்ந்திருக்காமல், மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் விரிவடைய வேண்டும் என ஸோஹோ நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

ஏஐ தொழில்நுட்பம் மட்டுமின்றி, இந்தியா சார்ந்த அனைத்து முக்கியத் தொழில்நுட்பத் துறைகளிலும் தற்சார்பு நிலையை அடைய, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளில் அதிக முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்புகள் பறிபோகுமோ என்ற அச்சம் இயல்பானது. எனினும், இளைஞர்கள் தங்களது திறமைகளையும் சிந்தனைத் திறனையும் வளர்த்துக்கொண்டு, மாறிவரும் காலத்துக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகரித்து வரும் புவிசார் அரசியல் மோதல்களுக்கு இடையிலும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து மீள்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. ஏற்றுமதியை மட்டுமே முழுமையாக நம்பியிருக்காமல், நாட்டின் உள்நாட்டுச் சந்தையைப் பயன்படுத்தி வளர்ச்சிப் பாதையை இந்தியா உருவாக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி சென்னை, பெங்களூரு, புனே போன்ற பெருநகரங்களுக்குள் மட்டுப்படாமல், மாவட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் சென்றடைய வேண்டும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். மேலும், இளைஞர்கள் பெருநகரங்களை நோக்கி இடம்பெயர்வதும் குறையும்.

கிராமப்புற வளர்ச்சியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வேலைவாய்ப்புகளும், அதிநவீன சிறுதொழில்களும் முக்கியப் பங்காற்ற முடியும்.

இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க