இடுகாடாக மாற்றும் பாகிஸ்தான்; ஐ.நா.,வில் காஷ்மீர் பெண் குற்றச்சாட்டு
24 புரட்டாசி 2026 வியாழன் 06:38 | பார்வைகள் : 2312
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இடுகாடாக மாற்ற பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக, காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தஸ்லீமா அக்தர் ஐ.நா.,வில் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற 63வது ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
அடிப்படை உரிமைகளைக் கோரி அமைதியான முறையில் போராடிய பொதுமக்கள் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டனத்திற்குரியது. மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை தோட்டாக்களால் ஒடுக்கும் ஒரு நாட்டால், காஷ்மீரிகளின் நலனில் உண்மையான அக்கறை கொண்டிருக்க முடியாது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை 'ஆசாத் காஷ்மீர்' என அழைப்பது மிகப்பெரிய பொய்யாகும். காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து, அந்தப் பகுதியை இடுகாடாக மாற்ற பாகிஸ்தான் முயன்று வருகிறது.
தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் அப்பாவி போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யாரும் ஐ.நா.,வில் அனுமதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, பாகிஸ்தானுக்காகப் பேச லண்டனைச் சேர்ந்தவர்களை அழைத்து வந்து, போலியான பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர்.
இவ்வாறு தஸ்லீமா அக்தர் தெரிவித்தார்.



