இந்தியா மீதான கூடுதல் வரி: ஜெய்சங்கர் அதிருப்தி
24 புரட்டாசி 2026 வியாழன் 07:42 | பார்வைகள் : 267
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சி கவலை அளிப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஐநா சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இந்தியாவின் அதிருப்தி மற்றும் கவலைகளை அவர் பதிவு செய்தார்.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இந்தியாவின் நலன்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இந்தியாவின் கவலைகள் குறித்தும் மார்கோ ரூபியோவிடம் ஜெய்சங்கர் எடுத்துரைத்தார்.
இதுதொடர்பாக அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ரஷ்யா மற்றும் ஈரான் மீதான தடைகள் தொடர்பாக இந்தியாவின் நலன்கள் மற்றும் கவலைகள் குறித்து எடுத்துரைத்ததாகவும், வளைகுடா மற்றும் உக்ரைன் நிலவரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக வர்த்தகத் தடைகள் மற்றும் கூடுதல் வரிகளை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில், ஜெய்சங்கர் - மார்கோ ரூபியோ சந்திப்பு நடைபெற்றுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



