இந்தியாவில் 2029ல் டிசம்பருக்குள் போதைப்பொருள் ஒழிக்கப்படும்!அமித்ஷா
24 புரட்டாசி 2026 வியாழன் 08:45 | பார்வைகள் : 399
இந்தியாவில் வரும் 2029ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் போதைப்பொருள் புழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டில்லியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் போதைப்பொருள் தடுப்புப் படை தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று அமித்ஷா பேசியதாவது:
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டிற்குள் ஒரு கிராம் போதைப்பொருள் கூட நுழையவோ, நாட்டை விட்டு வெளியேறவோ அனுமதிக்கப்படாது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட வாரியாகத் தீவிரப்படுத்தப்பட்டு, முழுமையான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக, போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் கடினமான இலக்கை அடைவதற்கான தொடர் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. நாட்டுக்கும் உலகிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள போதைப்பொருட்களுக்கு எதிராக நாம் போராடி வருகிறோம்.
போதைப்பொருட்களுக்கு எதிரான போராட்டம், அனைத்து போராட்டங்களிலும் மிகவும் கடினமான ஒன்றாகும். இருப்பினும், இந்தப் போராட்டத்தை நாம் கைவிட முடியாது. இதற்கான முக்கியக் களங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், உளவுத் தகவல் சேகரிப்பு, விசாரணை, நிதிசார் நடவடிக்கைகள் மற்றும் வழக்குத் தொடருதல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில், மாநில அளவில் செயல் திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
2029ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்தியாவில் போதைப்பொருள் புழக்கத்தை வேரறுப்பதில் நாம் அனைவரும் இணைந்து வெற்றி பெறுவோம். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்து, காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்.
ஒரு கிராம் போதைப்பொருள் கூட இந்தியாவிற்குள் நுழைவதையோ அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுவதையோ அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.



