ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு: அண்ணாமலை

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு: அண்ணாமலை

24 புரட்டாசி 2026 வியாழன் 09:48 | பார்வைகள் : 1571


ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவரையும் வெளிக்கொண்டு வருவதற்காக உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஒரு காலத்தில் நாட்டிலேயே சிறந்த காவல்துறையாகப் பாராட்டப்பட்ட தமிழக காவல்துறை, கடந்த சில ஆண்டுகளில் ஊழல் நிறைந்ததாகவும், திறமையற்றதாகவும், அரசியல்வாதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படும் துறையாகவும் மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். பல இளம் குழந்தைகள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கின் ஆரம்பகட்ட விசாரணையை தமிழக காவல்துறை கையாண்ட விதமே இதற்கு உதாரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுமி ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்டவரையும் குற்றத்தைச் செய்தவரையும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி, தமிழக காவல்துறை விசாரணையை முடித்து வழக்கை மூட முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்ததுடன், மேலும் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து விசாரணை மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், காவல்துறை ஜெம் கிரானைட்ஸ் வீரமணியையும் அவருடன் தொடர்புடையவர்களையும் கைது செய்தது. மேலும், அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்த சிறுமியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். இதைவிட முக்கியமாக, விசாரணையில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில் பலர், பாலியல் தாக்குதல்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் சிறார்களாக இருந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்மூலம், இந்த பாலியல் அத்துமீறல்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேர்மையாகவும் உறுதியுடனும் செயல்படும் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் நினைத்தால், எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இந்த வழக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு தவெக அரசு மேற்கொண்ட விரைவான நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என்றும் அவர் கூறியுள்ளார்.

நேற்று, ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரை, வீரமணி தொடர்பான ஆபாச வீடியோவை தன்னிடம் வைத்திருந்ததாகக் கூறி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த விசாரணை வீரமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுடன் மட்டும் முடிவடையக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக வீரமணியை பாதுகாக்கவும், அவருக்கு ஆதரவாக செயல்படவும் உதவிய காவல்துறை அதிகாரிகள், இதில் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயன்றவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கில் மிகப்பெரிய அளவில் பணம் கைமாறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக இந்தக் குற்றச் செயல்கள் தொடர அனுமதித்த அனைவரையும் வெளிக்கொண்டு வருவதற்காக உடனடியாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தமிழக காவல்துறை கடந்த காலத்தில் செய்த தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதும் அவசியம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரின், குறிப்பாக சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் சிறார்களாக இருந்தவர்களின் அடையாளங்களும் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படக் கூடாது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து படிக்க