தொடர் மின்வெட்டு புகார்; மின் வாரியத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!
24 புரட்டாசி 2026 வியாழன் 10:52 | பார்வைகள் : 273
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகளும் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், செப். 23 சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாநிலத்தின் தற்போதைய மின் உற்பத்தி மற்றும் மின் தேவையின் நிலவரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் கேட்டறிந்தார். ஆய்வை முடித்துக்கொண்ட அவர், பின்னர் காரில் புறப்பட்டுச் சென்றார்.
ஆய்வு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 600 துணை மின் நிலையங்களை அமைக்கும் பணிகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநிலத்தின் மின் தேவை குறித்தும் முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தேர்தல் காரணமாக பராமரிப்புப் பணிகள் தள்ளிப்போனதால், தற்போது மின் சாதனங்களில் பழுதுகள் ஏற்பட்டு வருகின்றன.
மின்தடை ஏற்படும்போது மக்கள் கோபப்படாமல், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அவகாசம் வழங்க வேண்டும். தமிழகத்திற்கு 600 துணை மின் நிலையங்கள் தேவைப்படுகின்றன. மேலும், 6 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அதிக மின் சுமையைத் தாங்க முடியாமல் டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைகின்றன. 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தையும் முதல்வரிடம் அளித்துள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.



