முதல்வரின் கண்காணிப்பில் வீரமணி வழக்கு; அமைச்சர் ராஜ்மோகன்

முதல்வரின் கண்காணிப்பில் வீரமணி வழக்கு;  அமைச்சர் ராஜ்மோகன்

24 புரட்டாசி 2026 வியாழன் 23:55 | பார்வைகள் : 259


வீரமணி பாலியல் வழக்கு முதல்வரின் தீவிர தனி கண்காணிப்பில் இருப்பதாகவும், இந்த வழக்கில் தொடர்புடைய யாரும் தப்பிக்க முடியாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது:

கம்யூனிஸ்ட் கட்சிக்கும், தமிழக வெற்றிக்கழகத்துக்கும் இடையிலான கூட்டணி உறுதியாக உள்ளது. நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவர்கள் எங்களுக்கு சீனியர்கள். தோழர்கள் எங்களிடம் வந்து வழிகாட்டுகின்றனர். வரலாறு எங்களுக்கு வழிகாட்டுவதைப் போல, தோழர் சண்முகம் உள்ளிட்டோரும் எங்களுக்கு வழிகாட்டுகின்றனர். பொதுவாக நாங்கள் கேட்கும் கேள்விகளை கம்யூனிஸ்ட் தோழர்களிடம் கேட்பதில்லை. அவர்கள் சிறப்பாகவே செயல்பட்டு வருகின்றனர். மகிழ்ச்சியாகவும், இணக்கமாகவும் இருக்கிறோம்.

அதேநேரத்தில், வீரமணி வழக்கு தொடர்பாக திமுகவிடம் எனக்கு சில கேள்விகள் உள்ளன. ரகுபதி, வீடியோ தெளிவாக இல்லை என்று கூறுகிறார். அவருக்கு எச்டி வீடியோ வேண்டுமா? இது எவ்வளவு பெரிய வழக்கு? இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது யார்? அந்த தனிநபர் யார்? அமைச்சரா, அதிகாரியா அல்லது முன்னாள் முதல்வரா?

அதிகாரமும் அரசியல் பலமும் கொண்டவர்கள் இதுபோன்ற வழக்குகளில் சிக்கும்போது, பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஒரு வருடமாக திமுக ஆட்சியில் வீரமணிக்கு எதிராக விசாரணை நடைபெறவில்லை. விசாரணையைத் தடுத்தது யார்? ஒரு வருடமாக திமுக ஆட்சியில் இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க உத்தரவிட்டது யார்?

கடந்த முறை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களில் யாரை காப்பாற்றுவதற்கு இந்த வழக்கில் முயற்சி செய்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த வழக்கு முதல்வரின் தீவிர தனி கண்காணிப்பில் உள்ளது. நிச்சயமாக யாரும் தப்பிக்க முடியாது.

ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை உரிமைகளை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க