போலி சமூகக் குடியிருப்புகள் பெயரில் மோசடி – 25 பேரிடம் 65,000 யூரோக்களுக்கும் மேல் சுருட்டிய இரு பெண்கள்!!

போலி சமூகக் குடியிருப்புகள் பெயரில் மோசடி – 25 பேரிடம் 65,000 யூரோக்களுக்கும் மேல் சுருட்டிய இரு பெண்கள்!!

23 புரட்டாசி 2026 புதன் 21:59 | பார்வைகள் : 1616


Yvelines மாவட்டத்தைச் சேர்ந்த 34 மற்றும் 40 வயதுடைய இரு பெண்கள், சமூகக் குடியிருப்பு(HLM) பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். 2022 முதல் 2023ஆம் ஆண்டு வரை Île-de-France முழுவதும் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடியில், பாதிக்கப்பட்ட 25 பேரிடம் இருந்து மொத்தம் 65,000 யூரோக்களுக்கும் அதிகமான தொகை பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான சமூகக் குடியிருப்பை ஒதுக்கித் தருவதற்காக ஒருவரிடம் அதிகபட்சமாக 5,000 யூரோக்கள் வரை பணம் கேட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்த மோசடி தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் Versailles குற்றவியல் நீதிமன்றத்தில் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி, பணத்தை இழந்தவர்களில் சுமார் பத்து பேர் Orgeval நகரில் வசித்த Orlane M. என்பவரின் வீட்டுக்குச் சென்று பணத்தைத் திருப்பித் தருமாறு வலியுறுத்தியுள்ளனர். அதற்கு முன்னதாக அவர்கள் மற்றொரு பெண்ணான Badra-வை சந்தித்திருந்ததாகவும், அவர் பெற்ற பணம் முழுவதையும் தனது கூட்டாளியிடம் வழங்கிவிட்டதாகக் கூறி பொறுப்பைத் தட்டிக்கழித்துள்ளார். 

இந்த வழக்கின் விசாரணை பாதுகாப்புத் தரப்பின் கோரிக்கையைத் தொடர்ந்து 2027 பெப்ரவரி மாதம் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சமூகக் குடியிருப்புகளுக்கான அதிகமான தேவை மற்றும் காத்திருப்புப் பட்டியலை பயன்படுத்தி, உண்மையில் இல்லாத குடியிருப்புகளை வழங்குவதாகக் கூறி பணம் வசூலித்ததாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படிக்க