அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலைவிரிப்பு: ஒரே நாளில் ரூ.1.73 கோடி பறிமுதல்
24 புரட்டாசி 2026 வியாழன் 14:07 | பார்வைகள் : 3517
அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையின் திடீர் சோதனைகளில் பறிமுதல் செய்யப்படும் தொகையும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் 55 துறைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 22 துறைகள் பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குகின்றன. இந்தத் துறைகளை மக்கள் அணுகும்போது, அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
பொதுமக்களில் சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் அரசு அலுவலகங்களை அணுகுவதும், லஞ்சம் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. லஞ்சப் புகார்கள் இன்றோ நேற்றோ தொடங்கியவை அல்ல; பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. இருப்பினும், அரசு அலுவலகங்களில் “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம்” என்ற விழிப்புணர்வு வாசகம் பெயரளவில் மட்டுமே தொடர்கிறது.
### யார் முதலில் லஞ்சம் கொடுக்கிறார்கள்?
“அவர்கள் கொடுப்பதால்தான் நாங்கள் வாங்குகிறோம்” என்று அரசு ஊழியர்களும், “அவர்கள் கேட்டதால்தான் நாங்கள் கொடுத்தோம்” என்று பொதுமக்களும் கூறுகின்றனர். இது முதலில் கோழி வந்ததா, முட்டை வந்ததா என்ற விடை தெரியாத கேள்வியைப் போல் உள்ளது.
தமிழகத்தில் தற்போது த.வெ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, “லஞ்சத்தை ஒழிப்போம்; மக்களுக்கு வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம்” என்று அவர் கூறி வருகிறார்.
### லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
இந்தச் சூழலில், தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சார்-பதிவாளர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் குறிவைத்து அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கடந்த 4 மாதங்களில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், லஞ்சப் பணம் சிக்காத அலுவலகமே இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், எந்தவித அச்சமுமின்றி ஜிபே மூலமாகவும் லஞ்சம் பெறப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
### ஒரே நாளில் ரூ.1.73 கோடி சிக்கியது
“கள்ளன் பெரிசா? காப்பான் பெரிசா?” என்ற பழமொழி கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது. இறுதியில் கள்ளன்தான் பெரிது என்பார்கள். அதுபோல, லஞ்ச ஒழிப்பு சோதனைகள் தொடர்ந்து நடைபெற்றாலும், அதனால் லஞ்சம் வாங்குவோர் அச்சமடைந்ததாகத் தெரியவில்லை. லஞ்சமும் சிறிதளவும் குறைந்தபாடில்லை.
அந்த அளவுக்கு சட்டப் பாதுகாப்பும் தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் தாசில்தார் அலுவலகங்களில் நேற்று திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.
இந்தச் சோதனைகளில்:
* ரூ.13 லட்சத்து 78 ஆயிரத்து 207 ரொக்க லஞ்சப் பணம்.
* ரூ.1 கோடியே 59 லட்சத்து 70 ஆயிரத்து 459 ஜிபே மூலம் பெறப்பட்ட லஞ்சப் பணம்.
என மொத்தம் ரூ.1 கோடியே 73 லட்சத்து 48 ஆயிரத்து 666 பறிமுதல் செய்யப்பட்டது.
### லஞ்சத்தை ஒழிக்க முடியுமா?
பறிமுதல் செய்யப்பட்ட தொகையில், ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் போலி ரசீது மூலம் வாகன நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ.12,750-ம் அடங்கும்.
அரசுக்குச் சேர வேண்டிய பணம், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாலேயே முறைகேடாகக் கையாளப்படுவது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சத்தையும் முறைகேடுகளையும் ஒழித்தாலே அரசின் கஜானா நிரம்பத் தொடங்கும். ஆனால், “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” என்ற பாடல் வரிகளைப் போல, லஞ்சம் வாங்குவோர் தங்களது செயல்களை நிறுத்தாதவரை, லஞ்சத்தை முற்றிலும் ஒழிப்பது கடினம் என்ற நிலையே நீடிக்கிறது.
எனவே, இனி இரும்புக்கரம் கொண்டு லஞ்சத்தை ஒழிக்க வேண்டிய பொறுப்பு அரசின் கைகளில்தான் உள்ளது.



