எரிபொருள் விலை உயர்வு: Chèque énergie உட்பட புதிய உதவிகள் அறிவிப்பு!!
24 புரட்டாசி 2026 வியாழன் 07:16 | பார்வைகள் : 2106
எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு புதிய உதவிகளை அறிவித்துள்ளது. பொருளாதார மற்றும் நிதியமைச்சர் Roland Lescure தலைமையில் ஆறு அமைச்சர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. “மக்களுக்கு நிலைமை மிகவும் கடினமாக இருப்பதை நாங்கள் உணர்கிறோம்” என Roland Lescure தெரிவித்துள்ளார்.
அதிக தூரம் வாகனம் ஓட்டுபவர்களுக்கான (“grands rouleurs”) 100 யூரோக்கள் சிறப்பு உதவி இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்படுவதுடன், அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் தற்போது சுமார் 3 மில்லியனாக இருந்த தகுதியானவர்களின் எண்ணிக்கை 5.5 மில்லியனாக அதிகரிக்கும். இதற்கு மாதம் 2,085 யூரோக்கள் வரை நிகர வருமானம் பெறுபவர்கள் தகுதி பெறலாம். ஏற்கனவே திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.2 மில்லியன் பேருக்கு தொகை தானாக வழங்கப்படும். மேலும், கிராமப்புறங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு 80 யூரோக்கள் சிறப்பு போனஸும் வழங்கப்படவுள்ளது.
மேலும், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 150 முதல் 277 யூரோக்கள் வரையிலான “Chèque énergie” உதவி 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திலும் தொடரும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த உதவி அடுத்த ஜனவரியில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கக்கூடிய வரிவிலக்கு பெற்ற எரிபொருள் உதவியின் உச்சவரம்பு 600 யூரோக்களிலிருந்து 1,000 யூரோக்களாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ள குடும்பங்களுக்கும் தொழில்முறையினருக்கும் கூடுதலாக 450 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.



