ரஷ்யா முதல் எரிபொருள் நெருக்கடி வரை - ஜனாதிபதி மக்ரோன் நேர்காணலின் முக்கிய அம்சங்கள்!!

ரஷ்யா முதல் எரிபொருள் நெருக்கடி வரை - ஜனாதிபதி மக்ரோன் நேர்காணலின் முக்கிய அம்சங்கள்!!

24 புரட்டாசி 2026 வியாழன் 22:27 | பார்வைகள் : 1437


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், France 2 மற்றும் TF1 தொலைக்காட்சிகளுக்கு வழங்கிய நீண்ட நேர்காணலில், ரஷ்யாவின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல், எரிபொருள் விலை உயர்வு, மத்திய கிழக்கு நிலைமை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விளக்கமளித்தார். பிரான்ஸ் மீது ரஷ்யாவின் தாக்குதல் முயற்சி நடைபெற வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்ததுடன், ஐரோப்பிய நாடுகள் மீது ரஷ்யா பல்வேறு விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். அதேவேளை, நாட்டின் தெற்கு பகுதியின் மீது ரஷ்ய ட்ரோன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை CIA எச்சரித்ததாக வெளியான தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்தார். ரஷ்யா மீண்டும் சுமார் 3 இலட்சம் பேரை இராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என நம்பத்தகுந்த சூழல் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இதனிடையே, செங்கடல் பகுதியில் உள்ள சவுதி அரேபியாவின் Yanbu எரிசக்தி தளத்தைப் பாதுகாக்க பிரெஞ்சு இராணுவ வீரர்கள், ரேடார்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பும் எனவும் அவர் அறிவித்தார். இந்த தளம் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அங்கிருந்து பல மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும், எண்ணெய் விலையை குறைக்க முதற்கட்டமாக தூதரக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப் போவதாகவும், நிலைமை சீரானால் எரிபொருள் விலையும் விரைவில் குறையக்கூடும் என்றும் மக்ரோன் தெரிவித்தார்.

தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு கையிருப்பு குறித்து கவலைப்பட தேவையில்லை எனவும், சில வாரங்களில் எரிபொருள் கையிருப்பு 80 சதவீதத்தை எட்டும் எனவும் மக்ரோன் கூறினார். எரிபொருள் மீதான வரியை உடனடியாகக் குறைக்க திட்டமில்லை என்றாலும், விலை உயர்வு தொடர்ந்து தீவிரமடைந்தால் வரிக்குறைப்பு நடவடிக்கையை நிராகரிக்க முடியாது என அவர் குறிப்பிட்டார். 

மேலும், 2024ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட Assemblée nationale-ஐ மீண்டும் கலைக்கும் நடவடிக்கை தற்போது இருக்காது என்றும், வரவு-செலவுத் திட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டாலும், ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவ்வாறு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க