சட்டசபை தேர்தல் செலவு: திமுக ரூ.198 கோடி; அதிமுக ரூ.112 கோடி

சட்டசபை தேர்தல் செலவு: திமுக ரூ.198 கோடி; அதிமுக ரூ.112 கோடி

25 புரட்டாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 417


சட்டசபை தேர்தலில், தி.மு.க. 197.84 கோடி ரூபாயும், அ.தி.மு.க. 112.39 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளதாக, அக்கட்சிகள் சார்பில் இந்திய தேர்தல் கமிஷனிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், கடந்த மார்ச் 16ல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஓட்டுப்பதிவு முடியும் வரை கட்சிகள் மேற்கொண்ட செலவுகளின் கணக்குகளை, அனைத்து அரசியல் கட்சிகளும் இந்திய தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றை சரிபார்த்த பின், தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் விவரங்களை வெளியிட்டுள்ளது.

### தி.மு.க.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, தி.மு.க. தலைமை அலுவலக வங்கி கணக்குகளில் 365.14 கோடி ரூபாய் இருப்பு இருந்தது. தேர்தல் காலத்தில் நன்கொடை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் 126.27 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்காக மட்டும் 149.89 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் பிரசாரத்திற்காக 2.66 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கூட்டணி கட்சியான மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய 3.24 கோடி ரூபாயை தி.மு.க. செலவிட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளர்களுக்காக 47.95 கோடி ரூபாய் உட்பட, மொத்தம் 197.84 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

மேலும், ஸ்டாலின் மருமகன் சபரீசனின் 'பென்' நிறுவனத்திற்கு 6.61 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவில் 319 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளதாக தி.மு.க. அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

### அ.தி.மு.க.

அ.தி.மு.க.வை பொறுத்தவரை, தேர்தல் காலத்தில் பல்வேறு வகைகளில் 87.41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தேர்தலுக்காக மொத்தம் 112.39 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.

இதில், 'பிரமான்யா ஸ்டேட்டர்ஜி கன்சல்டிங்' நிறுவனத்திற்கு மட்டும் விளம்பரத்திற்காக 103.98 கோடி ரூபாயை அ.தி.மு.க. வழங்கியுள்ளது. தேர்தல் நிறைவில் 295.98 கோடி ரூபாய் கையிருப்பில் உள்ளதாக அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.

### நா.த.க.

நாம் தமிழர் கட்சிக்கு, தேர்தல் அறிவிப்புக்குப் பின் பல்வேறு வழிகளில் 2.20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்திற்காக 93.29 லட்சம் ரூபாயும், நட்சத்திர பேச்சாளருக்காக 2.30 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. பயண செலவு, விளம்பர செலவு உள்ளிட்டவற்றையும் சேர்த்து, மொத்தம் 1.37 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

### பா.ஜ.

பா.ஜ.வை பொறுத்தவரை, மேற்கு வங்கத்தில் மொத்தம் 1,500 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. பிரசாரம், விளம்பரம் உள்ளிட்ட செலவுகளுக்காக மொத்தம் 286.99 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கேரளாவில் 83.67 கோடி ரூபாயும், புதுச்சேரியில் 14.73 கோடி ரூபாயும், அசாமில் 96.27 கோடி ரூபாயும் செலவு செய்துள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.வுக்கு 42.83 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மொத்தம் 51.56 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. இதில், அண்ணாமலை மற்றும் குஷ்பு ஆகியோரின் பிரசாரத்திற்காக மட்டும் 84.25 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

### காங்கிரஸ்

ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து காங்கிரஸ் கட்சி 248.55 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. மேலும், 207.17 கோடி ரூபாய் வருவாயாக பெற்றுள்ளது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க.வின் தேர்தல் செலவு கணக்கு இதுவரை வெளியிடப்படவில்லை.
 

தொடர்ந்து படிக்க