அணு ஆயுத மிரட்டலை பொறுக்காது: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
25 புரட்டாசி 2026 வெள்ளி 06:44 | பார்வைகள் : 235
''அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது'' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஆங்கில செய்தி சேனல் நடத்திய நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பாகிஸ்தான் மண்ணிலிருந்து தொடங்கும் எந்தவொரு விரோத நடவடிக்கையும் இனி போர் நடவடிக்கையாகவே கருதப்படும். அதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும். அணு ஆயுத மிரட்டலை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது.
### ரத்தமும், நீரும்
பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்ததன் மூலம், இனி எந்த எல்லையாலும் எங்களைத் தடுக்க முடியாது என்பதை இந்தியா வெளிப்படுத்தியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியதன் மூலம், ரத்தமும் நீரும் ஒன்றாகப் பாய முடியாது என்பதையும் உறுதி செய்துள்ளோம்.
மற்ற நாடுகளுடன் இந்தியா அமைதியான உறவுகளை விரும்புகிறது. அதே நேரத்தில், தனது பாதுகாப்பில் யாரும் விளையாடுவதை அனுமதிக்காது. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எல்லையில் புகலிடம் இல்லை.
### நிரூபித்துள்ளோம்
சர்ஜிக்கல் ஸ்டிரைக்ஸ், பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவை, தனது தேசிய நலன்களைப் பாதுகாக்கும் திறனும் உறுதியும் இந்தியாவுக்கு உள்ளது என்பதை நிரூபித்துள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் 'லட்சுமண ரேகையை' கடந்துவிட்டது. இந்தியா அனைத்து நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வருகிறது. ஆனால், அமைதிக்கான நமது விருப்பத்தை பலவீனமாகக் கருதிவிடக் கூடாது.
நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பான புகலிடமாக மாற முடியாது.
### முழு சுதந்திரம்
பயங்கரவாதத்தை ஆக்கிரமிப்புக் கருவியாகப் பயன்படுத்தும் நாடுகள், தனது இறையாண்மையையும் பாதுகாப்பையும் காக்கும் திறனும் உறுதியும் இந்தியாவிடம் உள்ளது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று, நமது ஆயுதப் படைகளுக்கு நாம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். அரசியல் தலைமை உறுதியாகவும் தீர்க்கமாகவும் இருந்து, அனைத்து சூழ்நிலைகளிலும் தங்களுக்குத் துணையாக நிற்கும் என்பதை நமது ஆயுதப் படைகள் அறிந்திருக்கின்றன.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.



