நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வடமாநில தொழிலாளர்கள் நியமனம்
25 புரட்டாசி 2026 வெள்ளி 07:55 | பார்வைகள் : 233
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வடமாநில தொழிலாளர்களை பணியமர்த்தி, ஆள் பற்றாக்குறை பிரச்னைக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது.
விவசாயிகள் அறுவடை செய்யும் நெல் மணிகளை கொள்முதல் செய்வதற்காக, தமிழகம் முழுவதும் 401 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திறந்துள்ளது.
முந்தைய தி.மு.க. ஆட்சியில், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் 'கமிஷன்' பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையை கூலித் தொழிலாளர்களும், கொள்முதல் நிலைய அதிகாரிகளும் பகிர்ந்து கொண்டனர்.
'இந்த ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்களில் கமிஷன் பெறும் நடவடிக்கை இருக்காது. அவ்வாறு நடந்தால் விவசாயிகள் புகார் தெரிவிக்கலாம்' என வாட்ஸாப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால், ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் வரை மட்டுமே கிடைக்கும் என்பதால், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை. ஒப்பந்த கூலித் தொழிலாளர்களும் பணிக்கு வர மறுத்துவிட்டனர்.
அதேநேரத்தில், தேவைப்படும் இடங்களில் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளை அழைத்து கலெக்டர்கள் நெருக்கடி கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பீஹார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு, பல மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
### ரூ.55 கமிஷன் வசூல்: அதிகாரிகள் மீது புகார்
நெல் விற்பனைக்கு வரும் விவசாயிகளிடம், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறையினர் வழங்கிய சாகுபடி பரப்பு, பயிர், நிலம் தொடர்பான சான்றுகளை நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பெற்று சரிபார்ப்பது வழக்கம்.
நெல் கொள்முதல் முடியும் வரை அந்த ஆவணங்களை அதிகாரிகள் வைத்திருப்பர். ஆனால், தற்போது பல நெல் கொள்முதல் நிலையங்களில் ஆவணங்களை சரிபார்த்தவுடன், அதிகாரிகள் உடனுக்குடன் அவற்றை விவசாயிகளிடம் திரும்ப வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பல கொள்முதல் நிலையங்களில் தற்போது ஒரு மூட்டைக்கு 55 ரூபாய் கமிஷன் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்தால் எந்த நேரத்திலும் பணியிடமாற்றம் செய்யப்படலாம் என்பதால், அதற்கு கொள்முதல் நிலைய அதிகாரிகள் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்காகவே, துணிந்து பணத்தை பெற்றுக்கொண்டு கொள்முதல் பணியில் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.



