ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகும் தவறு செய்தவர்களை பாதுகாப்பதா?: உயர்நீதிமன்றம்
25 புரட்டாசி 2026 வெள்ளி 08:58 | பார்வைகள் : 2146
''ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், தவறு செய்தவர்களை பாதுகாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தோன்றுகிறது'' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை ராமநாதபுரம் கோட்ட தரக் கட்டுப்பாட்டு உதவி பொறியாளர் தவநீதி. சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் அமைக்கப்பட்ட சாலைகளின் தரம் குறைந்ததற்கு அவர் பொறுப்பேற்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை செயலர் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கினார்.
இந்த குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி தவநீதி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி. புகழேந்தி விசாரித்தார்.
### மனுதாரர் தரப்பு வாதம்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜா கார்த்திகேயன் கூறியதாவது:
2010ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, சாலைப் பணிகளில் ஏற்படும் குறைபாடுகளுக்கு முதல் நிலையில் களப்பணி மேற்கொள்ளும் அலுவலர்கள், இரண்டாம் நிலையில் தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள், மூன்றாம் நிலையில் மேற்பார்வை அலுவலர்கள் என பொறுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தன்னிச்சையானது என தெரிவித்தார்.
### நீதிபதி உத்தரவு
2010ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை நெடுஞ்சாலைத்துறையின் இணையதளத்தில் இடம்பெறவில்லை. ஒரு குடிமகன் என்ற முறையில், இந்நீதிமன்றமும் கிராமப்புற சாலைகள் உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பயணம் செய்து வருகிறது.
பெரும்பாலான சாலைகள் இரண்டு ஆண்டுகளுக்குக்கூட தாக்குப்பிடிப்பதில்லை. சாலைப் பணி ஒப்பந்தங்கள் 'சிண்டிகேட்' அமைத்து வழங்கப்படுவது தொடர்பாக இந்நீதிமன்றம் பல வழக்குகளை விசாரித்துள்ளது.
சாலைகள் அமைப்பதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், அந்தப் பணிகள் முறையாகவும் தரமாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறை எதுவும் இல்லை.
### வருந்தத்தக்க நிலைமை
முதல், இரண்டாம், மூன்றாம் நிலைகளில் அலுவலர்களுக்கான பொறுப்புகளை நிர்ணயிக்கும் அரசாணை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஆட்சி நிர்வாகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், தவறு செய்தவர்களை பாதுகாக்கும் வகையில் அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தோன்றுகிறது.
2010ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை இணையதளத்தில் மக்கள் பார்வைக்கு கிடைக்காத வகையில் வைக்கப்பட்டிருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னரும் இத்தகைய வருந்தத்தக்க நிலைமை தொடர்கிறது.
ஒப்பந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தரநிலைகளின்படி சாலைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? அரசாணையின்படி கடந்த 5 ஆண்டுகளில் தவறு செய்த முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை அலுவலர்களுக்கு எதிராக எத்தனை ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
இவ்வழக்கை பொறுத்தவரை, தவறு செய்த அலுவலர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் என்ன?
மேலும், 2010ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாததற்கான காரணங்கள் குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை செயலர் செப். 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.



