இந்தியா வல்லரசாக உருவெடுப்பதை தடுக்க முடியாது: ரஷ்ய தூதர்

இந்தியா வல்லரசாக உருவெடுப்பதை தடுக்க முடியாது: ரஷ்ய தூதர்

25 புரட்டாசி 2026 வெள்ளி 10:04 | பார்வைகள் : 314


இந்தியா வல்லரசாக உருவெடுப்பதும், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதும் மாற்ற முடியாத போக்கு'' என இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் தனியார் செய்தி சேனல் நடத்திய ஊடக மாநாட்டில், இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்தியா வல்லரசாக மாறுவதும், சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மாற்றத்தை தடுக்க முடியாது. இந்தியா மற்றும் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு அமெரிக்க டாலரை மட்டுமே சார்ந்திருக்க முடியாது. அதற்கு மாற்று வழிகள் தேவை.

டாலருக்கு மாற்றாக வேறு ஒரு நாணயத்தை கொண்டு வருவது குறித்து மட்டும் நாங்கள் பேசவில்லை. பரிவர்த்தனைகள், வர்த்தகம், ஒத்துழைப்பு மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கான மாற்று வழிகள் குறித்து பிரிக்ஸ் அமைப்பில் விவாதித்துள்ளோம்.

இந்தியா - ரஷ்யா இடையேயான பரிவர்த்தனைகளில் 96 சதவீதம் தேசிய நாணயங்களை பயன்படுத்தியே நடைபெறுகின்றன.

ரஷ்யா மீது ஏற்கனவே 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே, மேலும் ஒரு தடை விதிக்கப்படுவதோ அல்லது ஏற்கனவே உள்ள தடைகளில் ஒன்று நீக்கப்படுவதோ எங்களுக்கு பொருட்டல்ல. இது அமெரிக்காவுக்கும் தெரியும். இந்தத் தடைகள் எந்த வகையிலும் ரஷ்யாவின் நோக்கத்தை மாற்றாது.

இந்தியாவில் இருந்து மாம்பழங்கள், ஜவுளிகள், தொழில்துறை உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியா - ரஷ்யா இடையேயான உறவு 80 ஆண்டுகளாக பல்வேறு துறைகளை உள்ளடக்கிய நீடித்த உறவாக இருந்து வருகிறது. இந்தியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளியாக ரஷ்யா தொடர்ந்து இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.
 

தொடர்ந்து படிக்க