நேர்மையான முறையில் தேர்தலை சந்தியுங்கள்: அமைச்சர் அருண்ராஜ்
25 புரட்டாசி 2026 வெள்ளி 13:20 | பார்வைகள் : 191
''குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சித்தால், திரும்பத் திரும்ப தோல்வியை சந்தித்துக் கொண்டுதான் இருப்பீர்கள். நேர்மையான முறையில் தேர்தலை சந்தியுங்கள்'' என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் நிருபர்களிடம் அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது:
அ.தி.மு.க. வீழ்ச்சியின் வரலாற்றை எழுதிய இபிஎஸை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவர் செய்த துரோகத்தின் காரணமாக, உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களாக இருந்தவர்கள் தமிழகத்திற்கு உண்மையான, நேர்மையான ஆட்சியை யாரால் வழங்க முடியும் என்பதை பார்த்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர்.
அவர்கள் தி.மு.க.விலா இணைந்திருக்கிறார்கள்? தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் கட்சியில் தானே இணைந்திருக்கிறார்கள். இது எப்படி தவறாக இருக்க முடியும்? நாங்கள் ஓட்டுக்கு காசு கொடுக்காமல் வெற்றி பெற்றோம்.
நாங்கள் நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வருகிறோம். இதுவரை யாருமே ஊழல் கலாசாரத்தை ஒழிக்க முடியும் என்று நம்பவில்லை. நம்ப முடியாத காரியத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செய்து கொண்டிருக்கிறார்.
மக்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சித்தால், திரும்பத் திரும்ப தோல்வியை சந்தித்துக் கொண்டுதான் இருப்பீர்கள். பொய் பிரசாரம் செய்வது, எம்.எல்.ஏ.க்கள் வந்தால் தடுத்து நிறுத்துவது என எதற்காக இந்த குறுக்கு வழி? நேர்மையான முறையில் தேர்தலை சந்தியுங்கள். எங்கள் ஆட்சியில் குறைகள் இருந்தால் அதை எடுத்துச் சொல்லுங்கள்.
எடப்பாடி தொகுதியில் எப்படி குறுக்கு வழியில் ஜெயித்தீர்களோ, இது எல்லாம் ஒரு நல்ல தலைவருக்கு அழகா? நல்ல தலைமைக்கு அழகா? எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றதற்கு உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் சந்தோஷப்பட்டு இருப்பார்களா? குறுக்கு வழியில் ஜெயித்தீர்கள்.
நான் என் தொகுதியில் வெற்றி பெற்றேன். ஒவ்வொரு நிர்வாகியும் அதை நினைத்து பெருமையாக இருக்கிறது. நாம் உழைத்தோம், ஜெயித்தோம் என்று பெருமையாக இருக்கிறது.
எடப்பாடி தொகுதியில் இருக்கும் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்களால் இதுபோன்று பெருமையாக சொல்ல முடியுமா? ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். வழியில் இருக்கும் உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தலைமையில் உண்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.
இந்த தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.



