த.வெ.க.வில் இணைந்தவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: பழனிசாமி
25 புரட்டாசி 2026 வெள்ளி 14:25 | பார்வைகள் : 1325
''த.வெ.க.,வின் குதிரை பேரத்தில் விலைபோன துரோகிகளுக்கு, இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்'' என, மதுராந்தகத்தில் நடந்த பிரசாரத்தின்போது அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
### மதுராந்தகம் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
த.வெ.க. அரசை காப்பாற்ற, முதல்வர் விஜயின் அறிவுறுத்தலின்படி, மரகதம் குமரவேலை குதிரை பேரத்தில் விலை பேசி ராஜினாமா செய்ய வைத்தனர். இதன் காரணமாகத்தான் இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
ஓட்டு போட்ட மக்களை விற்று, உழைத்த நிர்வாகிகளை மறந்து, பணத்தாசையால் த.வெ.க.வில் இணைந்த துரோகிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இங்கு நான் நீதி கேட்டு வந்துள்ளேன். துரோகம் செய்யும் எண்ணம் இனி யாருக்குமே வரக்கூடாது.
த.வெ.க.வை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். 12 நாட்களில் கட்சி மாறி துரோகம் செய்தவரை ஆண்டவன் கூட மன்னிக்க மாட்டான்.
ஆனால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றாலும், கணிதா சம்பத் அ.தி.மு.க.வை உயிர்மூச்சாக கருதி கட்சிக்காக உழைத்தார். த.வெ.க. தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளிலேயே இப்படி கேவலமான விஷயங்களை செய்யும் இவர்களா தூய்மையான ஆட்சியை வழங்குவர்?
தனது உழைப்பால் ஆட்சி அமைத்தால், அது நல்ல நிர்வாகமாக இருக்கும்.
வெற்றி, தோல்வியை விட மக்கள் பிரச்னைகள் குறித்தே அ.தி.மு.க. கவலைப்படும். ஆனால், த.வெ.க. நெல்லிக்காய் மூட்டை போன்றது; அவிழ்த்து விட்டால் சிதறிவிடும்.
இன்று மதுராந்தகத்தில் வாய் கிழிய பேசும் ஜாம்பவான்கள், கரூர் சம்பவத்தின்போது எங்கே ஓடி ஒளிந்தீர்கள்? கரூர் சி.பி.ஐ. வழக்கு முழுமை பெறும்போதுதான், த.வெ.க. இருக்குமா, இருக்காதா என்பது முடிவாகும்.
நான்கு மாத த.வெ.க. ஆட்சியில், தமிழகம் போராட்டக் களமாகி விட்டது. கடும் மின்வெட்டிலும் மின் கட்டணம் அதிகரிக்கிறது. நான்கு மாதங்களில் 250 கொலைகளும், 300 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளன.
இது எதுவுமே தெரியாத முதல்வர் விஜய், உல்லாசமாக வெளிநாடு செல்கிறார். இந்த ஆட்சியும், முதல்வரும் தமிழகத்திற்கு தேவையில்லை.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.



