மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம்: விஜய் பேச்சு

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரம்: விஜய் பேச்சு

26 புரட்டாசி 2026 சனி 05:14 | பார்வைகள் : 185


'ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம். இனிமேல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு த.வெ.க., தலைவர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:

108 இடங்களில் வெற்றி பெற்ற நாம் தான் ஆட்சியமைக்க வேண்டும். ஆனால், தி.மு.க., - அ.தி.மு.க., இரண்டும் இணைந்து ஒரு கூத்து நடத்தினர். அ.தி.மு.க.,வினர் பலர் பா.ஜ.,வின் ஒரு பிரிவாக உள்ளனர். அதேநேரத்தில், அது தற்போது தி.மு.க.,வின் கிளை கழகமாக மாறிவிட்டது என்று நான் கூறவில்லை.

பெரிய தலைவர்கள் பலர் அனுபவம் என்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்கலாம் என நினைக்கின்றனர். ஆனால், நம்மைப் போன்ற சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு சாதாரண கட்சி ஆட்சிக்கு வரக்கூடாதா?

நாம் ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்ய முடியாது; மக்கள் பணத்தை தொட முடியாது. அதைத் தொட்டால் சிக்கிக் கொள்வார்கள் என்பது அவர்களுக்கு தெரியும். இதனால், நாம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இருவரும் மாறி மாறி திட்டம் தீட்டினர்.

மக்கள் பணத்தை நாம் தொட மாட்டோம்; தொடவும் விட மாட்டோம்; ஏற்கனவே தொட்டவர்களையும் விட மாட்டோம். அதனால்தான் சட்டசபையில் முந்தைய காலங்களில் நடைபெற்ற ஊழல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறினோம்.

சட்டசபையில் ஊழல் குறித்து பேசினால், அதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும் என்கின்றனர். ஆதாரத்தை காட்டினால், அதை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கு வேறு ஏதாவது பதில் கூறினால், நீதிமன்றத்தில் உள்ள விவகாரத்தை சட்டசபையில் பேசக்கூடாது என்கின்றனர்.

சட்டசபையில் பேசக்கூடாது என்பதுதான் தி.மு.க.,வின் நோக்கமாக உள்ளது. அதனால்தான் நான் குரல் எழுப்ப வேண்டியுள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஊழல்கள் தற்போதைய தலைமுறையினருக்கு தெரியாது. நாம் ஊழலற்றவர்கள் என்று கூறி ஓட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால், 'இந்த விஜய் ஏன் பழைய விஷயங்களை எல்லாம் எடுத்துப் பேசுகிறார்?' என்று நம்மை பற்றி அவதூறாக பேசுகின்றனர்.

35 ஆண்டுகளாக இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் அரசியலுக்கு வந்துள்ளேன். இது ஒன்றும் புதிதல்ல. எனக்கு இன்னும் போதவில்லை; இதுபோன்ற விஷயங்கள் நிறைய வெளிவர வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.

ஊழல் செய்த கூட்டத்தை விட மாட்டோம் என்று ஸ்டாலினுக்கும், தி.மு.க.,வுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் பணத்தை தொட்டதே இல்லை என்று உங்களால் கூற முடியுமா? இனிமேலும் மக்கள் பணத்தை தொடவே மாட்டோம் என்று சொல்ல முடியுமா? ஊழல் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிக்க முடியுமா? அரசியலுக்கு வருவதற்கு முன்பும், அதன்பிறகும் உள்ள சொத்துக் கணக்கை வெளியிட முடியுமா?

ஸ்டாலின் தோற்றாலும், வெற்றி பெற்றாலும் அவர் எனது 'ஸ்வீட் அங்கிள்'தான். த.வெ.க.,வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என தி.மு.க.,வினரே கூறத் தொடங்கிவிட்டனர்.

இதுதான் வாழ்க்கையின் வட்டம். நாங்கள் அரசியலுக்கு குழந்தைகள்தான்; தமிழக மக்களின் குழந்தைகள். ஆனால், சிலர் பவள விழா கண்ட கட்சியுடன் இணைந்த பண்ணை வீட்டு குழந்தைகள் போல இஷ்டத்துக்கு உளறுகின்றனர். எங்களுடைய கேள்வி ஸ்டாலினுக்கு மட்டும்தான்.

இவ்வாறு விஜய் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க