உங்கள் முகமூடி கிழிந்து விட்டது; திமுக, அதிமுகவை விளாசிய முதல்வர் விஜய்
26 புரட்டாசி 2026 சனி 06:36 | பார்வைகள் : 252
ஜெயலலிதாவை அவதூறாக பேசியவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடும்போதே, அ.தி.மு.க.,வின் முகமூடி கிழியத் தொடங்கிவிட்டதாக த.வெ.க., தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக சாலை மார்க்கமாக வந்த விஜய்க்கு, வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, மதுராந்தகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பிரசாரக் கூட்டத்திற்கு வந்த விஜய்க்கு, த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேல் வெள்ளி வேல் ஒன்றை பரிசாக வழங்கினார். இதையடுத்து பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
என் நெஞ்சில் குடியிருக்கும் மதுராந்தகம் தொகுதி மக்களுக்கு வணக்கம். என்னுடைய சொந்தங்களே, உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. இன்று நான் முதல்வராக வரவில்லை. இடைத்தேர்தலில் ஓட்டு கேட்டு வந்துள்ளேன். எப்போதும் போல உங்கள் வீட்டு மகனாகவும், அண்ணனாகவும் வந்துள்ளேன்.
நான் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்கிறேன். உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? உங்கள் த.வெ.க., ஆட்சிக்கு வரக்கூடாதா? லஞ்சம், ஊழல், போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக உங்கள் விஜய் ஆட்சிக்கு வரக்கூடாதா? இதற்காகத்தான், 'தீயசக்தி' தி.மு.க., நம்மை பார்த்து தினமும் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிக்கொண்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.
நான் சினிமாவிலும், அரசியலிலும் வெற்றி பெற்றதற்கு தமிழக மக்கள்தான் காரணம். அதனால்தான் கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் 35 சதவீத ஓட்டு வாங்கி வெற்றி பெற முடிந்தது.
ஜெயலலிதாவை இதே ஸ்டாலின் சார் அவதூறாக பேசிய வீடியோ இன்னும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. அவர் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும், கட்சியினரும் இதுபோன்றுதான் பேசுகின்றனர். இவை அனைத்தையும் மக்களாகிய நீங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறீர்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
தி.மு.க., தொடர்ந்து இவ்வாறு பேசிக்கொண்டிருந்தாலும், அதற்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள்தான் அ.தி.மு.க.,வினர். ஜெயலலிதாவையே தவறாக பேசியவர்களுடன் இணைந்து ஆட்சி அமைக்க திட்டமிடும்போதே, அ.தி.மு.க.,வினரின் முகமூடி கிழியத் தொடங்கிவிட்டது. இதுகூட தெரியாமல் அவர்கள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
நமது த.வெ.க., சார்பில் என் தங்கை மரகதம் குமரவேலுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போடுங்கள். விசில் சின்னத்திற்கு வாக்களிப்பது பெண்களை ஆபாசமாக பேசுபவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய தண்டனையாக இருக்கும்.
'தீயசக்தி', 'ஆபாச சக்தி' மற்றும் அவர்களுக்கு ஓட்டுப்போட்டால், பெண்களை ஆபாசமாக பேசுபவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகிவிடும். எனவே, நமது வீட்டு பெண்களை இவ்வாறு பேசியவர்களை சும்மா விடக்கூடாது.
இவ்வாறு விஜய் கூறினார்.



