மக்கள் முன் நடித்துக்கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்: மு.க.ஸ்டாலின்

மக்கள் முன் நடித்துக்கொண்டிருக்கிறார் முதல்-அமைச்சர் விஜய்: மு.க.ஸ்டாலின்

26 புரட்டாசி 2026 சனி 07:38 | பார்வைகள் : 231


மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அவரது பேச்சுக்கு தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

'படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டேன்' என்று கூறிவிட்டு, மக்கள் முன் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் முதல்-அமைச்சர் விஜய் அவர்களே, இன்று மதுராந்தகம் Shooting-ல் உங்களின் Dialogue Delivery-யை பார்த்தேன். உங்களிடம் சில கேள்விகள் உள்ளன.

அ.தி.மு.க.,வில் இருந்து விலைக்கு வாங்கி, உங்கள் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ள மரகதம் குமரவேலை அருகில் வைத்துக்கொண்டே, 'த.வெ.க., தூய சக்தி; தி.மு.க., தீய சக்தி' என்று உங்களால் எப்படி கூச்சமே இல்லாமல் பேச முடிகிறது?

வாக்களித்த மை, விரல் நகத்தில் இருந்து அழியும் முன்பே NDA கூட்டணி எம்.எல்.ஏ.,க்களை தூக்குவதுதான் தூய சக்தியா? நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் உங்கள் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தீர்களா? 'த.வெ.க.,விடம் எவ்வளவு வாங்கினீர்கள்?' என்று கேட்டு மக்களே விரட்டி அடிப்பது கூட தெரியாத நபரா நீங்கள்?

அடுத்து, தி.மு.க.,வும் பா.ஜ.,வும் வேறு வேறு இல்லை என்றும் பேசியிருக்கிறீர்கள். சட்டமன்றத்தில் 'பா.ஜ.,' என்று சொன்னாலே, அது உங்கள் கூட்டணிக் கட்சி அமைச்சராக இருந்தாலும், அலறியடித்துக்கொண்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது யார் என்பதை Live-ல் பார்க்கும் மக்களுக்கு தெரியாதா?

கட்சி தொடங்கியதில் இருந்து தற்போது வரை எத்தனை முறை நீங்கள் பா.ஜ.,வை எதிர்த்து பேசியிருக்கிறீர்கள்? எத்தனை போராட்டங்களை நடத்தியிருக்கிறீர்கள்? பா.ஜ.,வை எதிர்த்து நீங்கள் செய்ததெல்லாம் அமைதிப் புரட்சி மட்டும்தானே? அதாவது சரணாகதிதானே?

'தி.மு.க., மாதிரி படிப்படியாக, தகுதி வாய்ந்தவர்களுக்கு என சொல்ல மாட்டேன். நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டும்தான் வாக்குறுதியில் கொடுத்திருக்கிறேன்' என்று அந்நியன் மாதிரி பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் 'கஜானா காலி' என அம்பி Mode-ல் பம்மி, கையை விரிக்கிறீர்களே? இதுதான் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றும் லட்சணமா?

உங்கள் ஆட்சியின் திட்டங்கள் என்று பார்த்தால், நாங்கள் கொண்டு வந்த திட்டங்களின் நீட்சியாகத்தான் உள்ளன. நீங்கள் புதிதாக கொண்டு வந்ததாக கூறக்கூடிய திட்டங்கள் எல்லாம்: வெற்றி மின்வெட்டுத் திட்டம், வெற்றி அரிவாள் வெட்டு திட்டம், வெற்றி விலைவாசி உயர்வு திட்டம், வெற்றி டெங்கு காய்ச்சல் திட்டம், வெற்றி பால் தட்டுப்பாடு திட்டம். இவ்வளவுதான்.

பெண்களை தி.மு.க.,வினர் அவதூறாக பேசுகிறார்கள் என்று பொய் பேசும் நீங்கள், உங்கள் Virtual Abuser-களின் Track Record-ஐ பார்த்துக் கொள்ளுங்கள்.

'ஜெம் வீரமணி வழக்கைப் பற்றி வாயைத் திறங்க ஸ்டாலின் சார்' என்று high pitch-ல் கத்தினீர்களே? உங்கள் Script Paper-ஐ Update செய்யாமல் வந்துவிட்டீர்களா? நான் இது குறித்து விளக்கமாக பேசியிருக்கிறேன். நீங்கள்தான் டிவி, பேப்பர் எதையும் பார்க்கவில்லை போல. எதிர்க்கட்சியை பார்த்து சட்டமன்றத்தில் நீங்கள் சொன்னதையே சொல்கிறேன்... பேப்பர் படித்திருந்தால் தெரிந்திருக்கும்.

இந்த வழக்கை அரசியலாக்கக் கூடாது என்று ஐகோர்ட்டு அறிவுறுத்தியதைக்கூட உங்கள் காதுகளில் அதிகாரிகள் ஓதவில்லை போலிருக்கிறது.

கரூரில் 41 மனித உயிர்கள் பலியானதைக்கூட கண்டுகொள்ளாமல் ஓடி ஒளிந்துகொண்ட உங்களைப் பற்றி, 'எந்தத் தலைவரும் தன் தொண்டர்கள் சாவதை விரும்ப மாட்டார்' என்றுதான் நான் கூறினேன். உங்களின் கோழைத்தனமான ஓட்டத்தை வைத்து அற்ப அரசியல் ஆதாயம் தேட நானோ, தி.மு.க.,வோ முயற்சிக்கவில்லை.

ஆனால், நீங்கள் எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறீர்கள் என்பதை, சும்மா இருக்கும் பெரும்பாலான நேரத்தில் யோசித்துப் பாருங்கள். 'முதல்-அமைச்சர் பொறுப்புக்குரிய கண்ணியத்தோடுதான் நாம் பேசுகிறோமா?' என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள், CM Sir.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

தொடர்ந்து படிக்க