இடைத்தேர்தல் களத்தில் காங்கிரசாரை காணோம்: தவெக அமைச்சர்கள் புகார்

இடைத்தேர்தல் களத்தில் காங்கிரசாரை காணோம்: தவெக அமைச்சர்கள் புகார்

26 புரட்டாசி 2026 சனி 08:40 | பார்வைகள் : 221


இடைத்தேர்தல் பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் போதிய அளவில் ஈடுபடவில்லை என, அக்கட்சியின் முன்னணி தலைவர்களிடம் த.வெ.க., அமைச்சர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தல் பிரசாரப் பணிகளில் த.வெ.க., அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், த.வெ.க., அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும்பாலானோர் பிரசாரப் பணிகளில் பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது. தாராபுரத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்திற்குக்கூட காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியானதும், அவரது நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கிரசார் தொடங்கினர். இதனால், இடைத்தேர்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக ராகுலின் உதவியாளர் பைஜுவிடம் த.வெ.க., அமைச்சர் ஒருவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராகுலின் தமிழக வருகை இடைத்தேர்தலுக்குப் பிறகு, அக்.10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

### தேர்தல் பணிக்குழுக்கள்

த.வெ.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு சமீபத்தில் த.வெ.க., அமைச்சர் ஆதவ் சென்றார். அங்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரை சந்தித்து பேசினார்.

இதைத்தொடர்ந்து, மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில், எம்.பி.,க்கள் விஷ்ணுபிரசாத், சுதா உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.

அதேபோல், தாராபுரம் தொகுதியில் காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் தலைமையில், எம்.பி.,க்கள் ஜோதிமணி, கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் அடங்கிய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது.

த.வெ.க., அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற்ற பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், தேர்தல் பணிகளில் முழு வீச்சில் செயல்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவுறுத்தியிருந்தார்.

ஆனால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் காங்கிரசாரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இதுதொடர்பாக, காங்கிரஸ் முன்னணி தலைவர்களிடம் த.வெ.க., தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க