ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம்: சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

26 புரட்டாசி 2026 சனி 09:43 | பார்வைகள் : 475


ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கை அரசியலாக்க வேண்டாம் என சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், பிரபல தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரின் தோழி சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்துள்ளன.

இந்நிலையில், வீரமணி வழக்கு தொடர்பான மனுக்களை விசாரித்து வரும் சென்னை ஐகோர்ட், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்துமாறு வழக்கறிஞர்களிடம் தெரிவித்துள்ளது.

### தடை கோரி வழக்கு

ஜெம் வீரமணிக்கு எதிரான வழக்கில் தி.மு.க.,வினரை குற்றம்சாட்டி கருத்து தெரிவிக்க தடை விதிக்கக் கோரி துரைமுருகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமைச்சர்கள் நிர்மல்குமார், ஆதவ் மற்றும் த.வெ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், அமைச்சர்கள் மற்றும் சமூக வலைதள நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

### வீடியோக்களை வெளியிட தடை

இதற்கிடையே, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான வீடியோக்களை ஊடகங்களோ அல்லது சமூக வலைதளங்களோ வெளியிடக்கூடாது எனக் கோரி துளிர் அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செய்திகள் மற்றும் சமூக வலைதளங்களில் இதுதொடர்பான வீடியோக்கள் பரவுவதைத் தடுக்க, அவற்றை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க