பிரம்மோஸ் ஏவுகணை: பாகிஸ்தான் தூக்கத்தை இழந்தது – அமித் ஷா
26 புரட்டாசி 2026 சனி 10:47 | பார்வைகள் : 212
உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளை பரிசாக அளித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடக்க விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகர், கான்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு முதலீடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளை ஏற்படுத்தி வருகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றம் நல்ல அறிகுறியாகும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், குறிப்பாக அமேதியில் தயாரிக்கப்படும் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள், நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் ஆகிய இரு தரப்பினருக்கும் தூக்கமில்லாத இரவுகளை கொடுத்துள்ளன.
உலக அளவில் பல்வேறு சூழல்கள் நிலவி வரும் நிலையில், இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தியுள்ளது. ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தியதற்கு பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளே காரணம். பாரபட்சமான கண்ணோட்டம் கொண்டவர்களால் இந்தியாவின் முன்னேற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பல நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் ஏற்றுமதி திறன் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒரு மாநிலத்தில் முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம்.
இவ்வாறு மத்திய அமைச்சர் அமித் ஷா பேசினார்.



