இளைஞர்கள் தான் வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பு ; பிரதமர் மோடி

இளைஞர்கள் தான் வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பு ; பிரதமர் மோடி

26 புரட்டாசி 2026 சனி 11:20 | பார்வைகள் : 169


'வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பாக இளைஞர்கள் திகழ்கின்றனர்' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை முன்னிட்டு, அவரது பிறந்த நாளான செப்., 17 முதல் அக்., 17ம் தேதி வரை, 'சேவா சங்கல்ப் அபியான்' என்ற பெயரில் பா.ஜ.,வினர் பல்வேறு நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் வட்நகரில் இருந்து, அவரது எம்.பி., தொகுதியான வாரணாசி வரை பா.ஜ.,வினர் 'சேவா சங்கல்ப் யாத்திரை' மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த யாத்திரையில் பங்கேற்ற பா.ஜ.,வினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

சேவா சங்கல்ப் யாத்திரை குழுவினரின் சேவை மனப்பான்மையும், அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன. வட்நகர் மற்றும் வாரணாசி ஆகிய இரு நகரங்களும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

வட்நகர் எனது பிறந்த இடம். வாரணாசி எனது பணியிடமாகவும், சொந்த தொகுதியாகவும் இருப்பது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

தன்னலமற்ற சேவை மனப்பான்மையின் காரணமாகவே ஆயுஷ்மான் யோஜனா போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த இரு நகரங்களுக்கு இடையே பயணம் செய்யும்போது, இதுபோன்ற சேவைகளின் அனுபவங்கள் உங்களுக்கு கிடைத்திருக்கும்.

நாட்டை கட்டியெழுப்புவதுதான் நமது முக்கிய நோக்கம். 'விக்சித் பாரத்' என்ற இலக்கை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற கனவை நனவாக்குவதில் இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
 

தொடர்ந்து படிக்க