சக மனிதர்களை சமமாக நடத்தி செம்மைப்படுத்துவதே தலைமை பண்பு; அண்ணாமலை

சக மனிதர்களை சமமாக நடத்தி செம்மைப்படுத்துவதே தலைமை பண்பு; அண்ணாமலை

26 புரட்டாசி 2026 சனி 13:30 | பார்வைகள் : 235


இந்தியாவில் மனித ஆற்றல் வீணடிக்கப்படுவதாக 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நடைபெற்ற 'யங் இந்தியன்ஸ்' அமைப்பின் ஆண்டு விழாவில் அவர் பேசியதாவது:

தலைமைத்துவம் என்பது ஒரு பதவி அல்லது பட்டத்துக்குள் அடங்கியது அல்ல. சக மனிதர்களை சமமாக நடத்துவதுடன், அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து மேலும் மேம்படுத்துவதுதான் ஒரு தலைவரின் முக்கிய கடமை.

சுவிட்சர்லாந்தின் பொருளாதாரம் ரூ.96 லட்சம் கோடியாக உள்ளது. அந்நாட்டின் மக்கள் தொகை 91 லட்சம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து ரூ.3.71 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. ஆனால், 142 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் அதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.2.45 லட்சம் கோடி மட்டுமே.

சர்வதேச தரவுகளின்படி, அயர்லாந்தில் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேர பொருளாதார பங்களிப்பு ரூ.12,100 ஆக உள்ளது. சீனாவில் இது ரூ.4,250 ஆகவும், இந்தியாவில் ரூ.830 ஆகவும் உள்ளது. எனவே, இந்தியாவின் மனித ஆற்றலை உற்பத்தித்திறன் கொண்டதாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

ஒவ்வொரு தனிமனிதரின் முழுத் திறனையும் வெளிக்கொண்டு வந்து, அதை சமூக மாற்றத்திற்காக பயன்படுத்துவதுதான் 'வீ தி லீடர்ஸ்' இயக்கத்தின் நோக்கம். இந்த இயக்கம் எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானது அல்ல.

மேலை நாடுகளில் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு வயது கட்டுப்பாடுகள் இருப்பதைப் போல, இந்தியாவிலும் அதுபோன்ற கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இதற்கிடையே, அண்ணாமலை நடத்தி வரும் அமைப்பில் அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராஜா இன்று இணைந்தார். இவர் அ.தி.மு.க.,வில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச்செயலராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்ந்து படிக்க