Rafale போர் விமானத்தில் நாசவேலை - முக்கிய உலோகங்கள் திருட்டு!!
26 புரட்டாசி 2026 சனி 15:21 | பார்வைகள் : 2572
பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளில் கடந்த சில மாதங்களாக Rafale போர் விமானங்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த உலோகங்கள் திருடப்பட்டமை தொடர்பில் பல்வேறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Val-d'Oise மாவட்டத்தின் Cergy பகுதியில் உள்ள Dassault Aviation தொழிற்சாலையில், தயாரிப்புப் பணியில் இருந்த Rafale விமானம் ஒன்று 2025ஆம் ஆண்டின் இறுதியில் சேதப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
இதனிடையே, பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான தொழிற்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு இரகசியங்கள் மற்றும் ஆயுதத் தயாரிப்பு அமைப்புகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் ஜொந்தாமினர் பிரிவும் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.
இந்நிலையில், ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், நாட்டின் முக்கியமான உட்கட்டமைப்புகள் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளால் மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதல்கள் குறித்த அச்சம் காரணமாக, இராணுவ மற்றும் தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கண்காணிப்பையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



