10%+ பொருளாதார வளர்ச்சி சாத்தியம்: நிர்மலா சீதாராமன்
27 புரட்டாசி 2026 ஞாயிறு 06:50 | பார்வைகள் : 171
சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் பெங்களூருவில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“அதிகமான பொருளாதார வளர்ச்சியின் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா), ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) ஆகிய இலக்குகளை நோக்கிய இந்தியாவின் பயணத்தை வேகப்படுத்த முடியும். இதற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் மிகப்பெரிய அளவிலான முயற்சி தேவை.
இந்தியாவால் 10 சதவீதத்துக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும். உங்களை உற்சாகப்படுத்துவதற்காக மட்டும் இதை நான் கூறவில்லை. இது உண்மையில் சாத்தியமான ஒன்றுதான். 2015-ம் ஆண்டுக்கு பிறகு உருவான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி, வரும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கக்கூடும்.
எதிர்மறையான மனப்பான்மையை கடந்து, நேர்மறையாக சிந்திப்பதுடன், களத்தில் ஏற்படும் முன்னேற்றங்களையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். இந்தியா தோல்வியடைவதை கண்டு மறைமுகமாக மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளனர். இதுபோன்ற மனநிலையை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அவர்களையும் நேர்மறையாக சிந்திக்க தூண்ட வேண்டும்.
உற்பத்தியாளர்களை சந்தைகளுடன் இணைப்பதிலும், உற்பத்தித் திறனை மேம்படுத்துவதிலும் தொழில்நுட்பத்தின் தலையீடு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சியால், ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து துறைகளையும் சென்றடையும்.
விவசாயிகள் தங்களுக்கு விருப்பமான உரங்களை தொடர்ந்து வாங்கும் உரிமையை கொண்டிருப்பார்கள். அதேநேரத்தில், தங்கள் பயிர்களுக்கு தேவையான உரத்தின் அளவு குறித்த தகவல்களை தொழில்நுட்பம் அவர்களுக்கு வழங்கும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை அதிகமாக பயன்படுத்துவதால் மண் மற்றும் நீர் மாசுபட்டு வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பம் உதவும்.
எனவே, தொழில்நுட்பங்கள் எவ்வளவு விரைவாக அனைத்து துறைகளையும் சென்றடைகிறதோ, அந்த அளவுக்கு அது இந்தியாவுக்கு நன்மை பயக்கும். உற்பத்தியும் சிறந்த முறையில் நடைபெறுவதால், நாட்டின் வளர்ச்சிக்கு அது மேலும் வலுசேர்க்கும்” என்று தெரிவித்தார்.



