வாக்காளர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை: தேர்தல் ஆணையம்

வாக்காளர்கள் நேரில் ஆஜராக தேவையில்லை: தேர்தல் ஆணையம்

27 புரட்டாசி 2026 ஞாயிறு 07:53 | பார்வைகள் : 174


எஸ்ஐஆர் பணியின்போது முரண்பாடுகள் இருப்பதாக நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள், தேர்தல் பதிவு அதிகாரியின் முன்பு நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பல்வேறு முடிவுகளில் தேர்தல் ஆணையர்களிடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, எஸ்ஐஆர் பணியின்போது முரண்பாடுகள் இருப்பதாக நோட்டீஸ் பெற்ற வாக்காளர்கள், தேர்தல் பதிவு அதிகாரியின் முன் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை. பூத் நிலை அலுவலரே சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களை சேகரித்து, அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளரிடம் தேர்தல் பதிவு அதிகாரியின் வழிகாட்டுதலின்படி வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தப்படும். மேலும், முரண்பாடுள்ள வாக்காளருக்குப் பதிலாக அவரது குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த விசாரணையில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையர்களின் கடிதம் தொடர்பாக வெளியான செய்திக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அந்தக் கடிதம் ஆணையத்தின் கொள்கை விவகாரங்கள் தொடர்பானது அல்ல என்றும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி தொடர்பான வேலை மறுபகிர்வு உத்தரவுகள், இரண்டு ஆணையர்களின் உத்தரவுக்குப் பின்னரும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், டெல்லியில் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளுக்கான காலக்கெடு அக்டோபர் 30-ம் தேதி வரையும், மகாராஷ்டிராவில் அக்டோபர் 12-ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளதாகவும், விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க உடனடியாக சிறப்பு முகாம்கள் தொடங்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

தொடர்ந்து படிக்க