பாகிஸ்தான் நிருபருக்கு ஜெய்சங்கர் பதிலடி
27 புரட்டாசி 2026 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 198
“ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இதைக் கேட்கிறதா?” என பாகிஸ்தான் நிருபர் ஒருவரின் கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் 81-வது பொதுச்சபை கூட்டம் செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அடுத்த நொடியே ஜெய்சங்கர் அளித்த பதிலடி தொடர்பான வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
கேள்வி:
“பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு இந்திய அரசு எப்போது நிதியளிப்பதை நிறுத்தும்?” என பாகிஸ்தான் நிருபர் கேள்வி எழுப்பினார்.
ஜெய்சங்கர் பதில்:
“ஒரு பயங்கரவாத நாடு என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறதா? என்ன இது?” என ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதிலளித்த சில நிமிடங்களிலேயே, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியேறினர்.



