பக்தி, பஜனை பாரம்பரியத்தை காங்., அவமதித்தது: பா.ஜ.

பக்தி, பஜனை பாரம்பரியத்தை காங்., அவமதித்தது: பா.ஜ.

27 புரட்டாசி 2026 ஞாயிறு 09:01 | பார்வைகள் : 167


தேசத்தின் தொன்மையான பஜனை மற்றும் பக்தி பாரம்பரியத்தை காங்கிரஸ் மீண்டும் அவமதித்துள்ளதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ‘பஜன் கிளப்பிங்’ என்ற பக்தி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றதை காங்கிரஸ் விமர்சித்த நிலையில், பா.ஜ., இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

பா.ஜ.,வின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தை கடந்த 1951-ம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவினார். பின்னர், அந்தக் கட்சியை நாடு முழுவதும் வளர்த்தெடுத்தவராக பண்டிட் தீனதயாள் உபாத்யாயா போற்றப்படுகிறார். அவரது 110-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

அப்போது, நவீன இசையுடன் பக்திப் பாடல்களை இணைத்து இசைக்கும் ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பக்தி இசையை பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகனும், கர்நாடக மாநில அமைச்சருமான பிரியங் கார்கே, ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றதை கடுமையாக விமர்சித்தார்.

இதுதொடர்பாக தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பதிவில், “பிரதமர் மோடிக்கு ‘பஜன் கிளப்பிங்’ நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரம் இருக்கிறது. ஆனால், தேர்தல் கமிஷன் மூலம் ஜனநாயகத்தை நசுக்குவது போன்ற தீவிரமான கேள்விக்கு பதில் அளிக்க நேரமில்லை” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பா.ஜ., தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கேசவன் கூறுகையில், “பஜனை, பக்தி என்ற நாட்டின் தொன்மையான பாரம்பரியத்தை காங்கிரஸ் மீண்டும் அவமதித்துவிட்டது. சுயநலமிக்க காங்கிரஸ் குடும்பத் தலைவர்களை துதிபாடுவதைத் தவிர வேறு எதையும் அறியாத ஜூனியர் கார்கேவிடம் இருந்து இதற்கு மேல் என்ன எதிர்பார்க்க முடியும்?” என விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படிக்க