மகளிர் மேம்பாட்டுக்கு மோடி நடவடிக்கை: அமித் ஷா

மகளிர் மேம்பாட்டுக்கு மோடி நடவடிக்கை: அமித் ஷா

27 புரட்டாசி 2026 ஞாயிறு 10:10 | பார்வைகள் : 150


நாட்டின் கிராமப்புற மற்றும் மகளிர் மேம்பாட்டுக்காக, கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம் பிரதமர் மோடி மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

“நாடு சுதந்திரம் அடைந்தது முதல், விவசாயிகள் மற்றும் கூட்டுறவுத்துறையைச் சேர்ந்தவர்கள், மத்திய அரசின் கீழ் தனி கூட்டுறவு அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், இந்த கோரிக்கை நீண்ட ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், பிரதமர் மோடி கூட்டுறவு அமைச்சகத்தை உருவாக்கியதன் மூலம், நாட்டின் கிராமப்புற மேம்பாடு, விவசாய வளர்ச்சி மற்றும் மகளிர் மேம்பாட்டுக்கு மிகப்பெரிய படியை எடுத்துள்ளார்.

திருவிதாங்கூர், கொச்சி, மலபார் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திரத்துக்கு முன்பே கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்துள்ளன. தற்போது கேரளாவில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன.

2026-27 மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த ‘ஷி மார்ட்’ (SHE Mart) திட்டம் கேரளாவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் கடன் பெறுவோராக மட்டுமின்றி, தொழில்முனைவோராகவும் மாறுவார்கள். பெண்களின் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊரகத் தொழில் நிறுவனங்களை நேரடியாக சந்தையுடனும் நுகர்வோருடனும் இணைக்க முடியும்” என்று அமித் ஷா தெரிவித்தார்.
 

தொடர்ந்து படிக்க