ஜெம் வீரமணி வழக்கை தி.மு.க., தவறாக கையாண்டது: நிர்மல்குமார்
27 புரட்டாசி 2026 ஞாயிறு 11:22 | பார்வைகள் : 212
“ஜெம் வீரமணி வழக்கை தி.மு.க., அரசு கையாண்ட விதம் தவறானது. இந்த விவகாரத்தில் தி.மு.க., அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதை காட்டுகிறது” என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“தி.மு.க.,வை ஒழிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைத்தார். அதை முதல்வர் விஜய் செய்து காட்டுவார். ‘பா.ஜ., எங்கள் கொள்கை எதிரி’ என்பதில் த.வெ.க., உறுதியாக உள்ளது. ஏற்கனவே வக்பு விவகாரம் மற்றும் பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக பா.ஜ.,வை எதிர்த்துள்ளோம்.
‘ஜெம்’ வீரமணி வழக்கை தி.மு.க., அரசு கையாண்ட விதம் தவறானது. இந்த விவகாரத்தில் அக்கட்சி அதிகமாக எதிர்வினையாற்றுவது, வழக்கில் ஏதோ தவறு இருப்பதை வெளிப்படுத்துகிறது. தி.மு.க.,வினர் வீரமணியை காப்பாற்ற நினைக்கின்றனர். வீடியோவில் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி முன்னாள் சட்ட அமைச்சர் ரகுபதி கடந்து சென்றுள்ளார். இது சாதாரணமாக கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல.
2024-ல் வீரமணிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார், அப்போதைய போலீஸ் கமிஷனருக்கு சென்றுள்ளது. அப்போதைய முதல்வர் ஸ்டாலினுக்கும் அந்தப் புகார் சென்றிருக்கும். வீரமணியிடம் பலர் பேரம் பேசி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தபோது அப்போதைய முதல்வர் என்ன செய்தார்? எத்தகைய உத்தரவு பிறப்பித்தார்?
போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துள்ளனர். அப்படியானால், பேரம் முடிந்து விட்டது என்று அர்த்தமா? ஒன்றரை ஆண்டுகளாக இந்தப் பிரச்னை திரைமறைவில் நடந்துள்ளது. நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயில் பேரம் நடந்துள்ளது.
மோசமான இந்தக் குற்றத்தை செய்தவர்கள் மற்றும் அதற்கு உதவியாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.



