பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

பயங்கரவாதத்துக்கு பின்விளைவுகள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

27 புரட்டாசி 2026 ஞாயிறு 13:35 | பார்வைகள் : 214


“பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இருக்கும். ஐ.நா., கூட்டத்தில் ஆண்டுதோறும் பொய்களை கூறுவதால் அவை உண்மையாகிவிடாது” என இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா., கூட்டத்தில் பேசிய ஐ.நா.,வுக்கான இந்திய நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெதல் கெஹ்லோட், எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர், சிறுபான்மையினர் உரிமைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பாகிஸ்தான் பேசியதற்கு பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:

“பாகிஸ்தானின் நீண்டகால எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. பயங்கரவாதிகளுக்கு ஓடுவதற்கும், ஒளிந்து கொள்வதற்கும் இடமில்லை என்பதை கடந்த ஆண்டே இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் நிரூபித்துள்ளது.

பாகிஸ்தான் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து பேசுவது வேடிக்கையானது. அங்கு ராணுவத்தின் கீழ் இயங்கும் ஆட்சிமுறை உள்ளது. சிறுபான்மையினரை பாகிஸ்தான் அரசு எவ்வளவு மோசமாக நடத்துகிறது என்பது உலகத்துக்கே தெரியும்.

பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் கட்டாயம் இருக்கும்; அவை ஏற்கனவே உள்ளன. ஆண்டுதோறும் பொய்களை மீண்டும் மீண்டும் கூறுவதால் அவை உண்மையாகிவிடாது.

பாகிஸ்தான் பயங்கரவாதம், வஞ்சகம் மற்றும் இரட்டை வேடம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதி என்பதே எங்களது நிலைப்பாடு.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அப்பகுதி மக்கள் கண்மூடித்தனமான கொலைகள் மற்றும் கொடூரமான வன்முறையை அனுபவித்து வருகின்றனர்” என்று பெதல் கெஹ்லோட் பதிலளித்தார்.
 

தொடர்ந்து படிக்க