அந்நிய நேரடி முதலீடு: தமிழகம் முதலிடம்
27 புரட்டாசி 2026 ஞாயிறு 14:42 | பார்வைகள் : 217
நடப்பு 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவிலேயே அதிக அளவு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகம் ரூ.57,011 கோடி அந்நிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது.
கடந்த 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் தமிழகத்தின் அந்நிய நேரடி முதலீடு ரூ.25,870 கோடியாக இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் முதலீட்டு வரவு இரு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் அந்நிய நேரடி முதலீட்டு வரவில் தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. நாட்டின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் தமிழகத்தின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. குறிப்பாக நிதி, வங்கி, காப்பீடு, வணிகம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட சேவைத் துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளன.
ஜப்பானின் முன்னணி நிறுவனமான MUFG, தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் மேற்கொண்ட பெரும் முதலீடே தமிழகத்தின் முதலீட்டு வரவு உயர்வுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் கர்நாடகாவின் பங்கு 2025-26ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 31 சதவீதமாக இருந்தது. இது நடப்பு 2026-27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 11 சதவீதமாக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவின் பங்கும் 29 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் அந்நிய நேரடி முதலீட்டு வரவில் குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்தித்துள்ளன. குஜராத் மாநிலத்தில் மட்டும் முதலீட்டு வரவு சற்று அதிகரித்துள்ளது.
மேலும், தற்போதைய ஜூலை-செப்டம்பர் காலாண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனமான 'வால்கிரீன்ஸ்' மற்றும் காபி நிறுவனமான 'ஸ்டார்பக்ஸ்' உள்ளிட்ட இரண்டு முக்கிய முதலீடுகளையும் தமிழகம் ஈர்த்துள்ளது.



